19 ஜூலை, 2010

இந்தியாவிலிருந்து சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியமில்லை: இலங்கை அமைச்சர்



இலங்கை தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருவதால் அதுதொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியா சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளை ஆய்வுசெய்ய சிறப்புத்தூதர் ஒருவரை அனுப்ப வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சிறந்த புரிந்துணர்வும், உறவும் உள்ளது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில்கூட இந்தியா இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. இந்தியாவுடனான உறவு உலகில் வேறு எந்த நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை விட சிறந்ததாகும்.

தமிழ் மக்களின் மறுகுடியமர்வு தொடர்பாக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே இலங்கை நிலைமை தொடர்பாக ஆராய இந்தியாவிலிருந்து சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக