19 ஜூலை, 2010

ராஜீவ் காந்தி சொன்னதைக் கேட்டிருந்தால் பிரபாகரன் மன்னனாக இருந்திருப்பார்-ப.சிதம்பரம்

ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன். இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன்.

அவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் இரு மாநிலங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.ஆனால், நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவித்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 108ஆவது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இலங்கைப் பிரச்சினை பற்றி கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காங்கேசன் துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் சீர்படுத்தித்தர இந்தியா முன் வந்திருக்கிறது. இன்னும் 2 வருட காலத்தில் அங்குள்ள 2 லட்சம் தமிழர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக