5 ஜூலை, 2010

மட்டக்குளிய விவகாரம்; பொதுமக்கள் மீதே குற்றச்சாட்டு : பொலிஸ் தரப்பு


கொழும்பு மட்டக்குளியவில் கைது செய்யப்பட்ட நபர் இறந்துவிட்டார் என்று பொய்யான செய்தி பரவியதன் காரணமாகவே பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இலங்கக்கோன் தெரிவித்தார்.

மட்டக்குளிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து இந்நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸ் தலைமையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கக்கோன் இச்சம்பவத்துக்கு விளக்கமளித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்த நபர் எமது வாகனத்தின் கண்ணாடியைத் தனது கையால் உடைத்தார். அதன்போது அவரது கையில் காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாரின் தாக்குதலினால் இவருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தவறாக எண்ணிவிட்டனர். இதுவே முறுகலுக்குக் காரணமாக அமைந்தது.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குற்றம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 160 ஆண்களும் 21 பெண்களும் கைது செய்யப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது குற்றப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் அநுர சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், சந்தேக நபரை கைது செய்யும் போது அவரது கையில் 31 கிராம் ஹெரோயின் காணப்பட்டதாகக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக