5 ஜூலை, 2010

மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட சகல பொலிஸாருக்கும் இடமாற்றம்

மட்டக்குளியில் பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே நேற்று முன்தினத்திலிருந்து ஏற்பட்ட கொந்தளிப்பான நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அந்த நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி உட்பட சகல பொலிஸாரையும் வேறிடங்களுக்கு மாற்றியதுடன் மேற்படி நிலைமை ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் தலைமைக் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும் பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரும் இடமாற்றப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சட்டத்தை மீறி நடந்து கொண்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவம் குறித்து கொழும்பு குற்றவியல் பொலிஸ் பிரிவினர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 200 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மேலும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக