14 ஜூன், 2010

மருந்துகள் இறக்குமதி, விநியோகத்தில் ஊழல்கள் நடந்தால் மன்னிப்பு இல்லை கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அப்பாவி நோயாளர்களுக்காக அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்யும் ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, அந்நடவடிக்கை தொடர்பாக உள்ள சட்ட திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீல.சு.க. பொதுச் செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் சரியான தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அதை இறக்குமதி செய்வதிலும் விநியோகிப்பதிலும் ஊழல்கள் நடக்கு மாயின் அத்தகைய வர்களுக்கு எவ்வித மன்னிப்புகளும் வழங்கப்படமாட்டா தெனவும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் (12) அரசாங்க ஔசத சங்கத்தின் 13வது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்:- அப்பாவி நோயாளர்களுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் மருந்து வில்லையிலும் சுரண்டுகின்ற சுரண்டல் வாதிகள் இருப்பதாகவும் தெரியவருகிறது. மேலும் வழங்க வேண்டிய மருந்தை குறைத்து வழங்குவோர்களும் உள்ளனர்.

சட்டத்தை கடுமையாக்கி இவர்களுக்கு தண்டனை வழங்குவதால் மட்டும் இதனைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சகலரும் செயலாற்றினால் சமூகத்தை கட்டியெழுப்பி, மனிதர்களுக்கு அன்பைக் காட்டி மனச்சாட்சிப்படி நடப்பதை மட்டும் கொண்டே எமது கடமைகளை செவ்வனே நிறைவேற்ற முடியும். ஆகவே, இதனை அனைத்து அதிகாரிகளும் புரிந்து கொள்ளல்வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக