கண்ணிவெடிகளை வெடிக்கச்செய்து 200 மாவோயிஸ்டுகள் அட்டகாசம்ரெயில் தண்டவாளத்தில் மாவோயிஸ்டு 200 பேர் கூடி, கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அந்த வழியாக வந்த சரக்கு ரெயிலின் 14 டீசல் `டேங்கர்"கள் வெடித்து எரிந்தன.
இந்த பயங்கர நாசவேலையை பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் செய்து இருக்கிறார்கள். அங்குள்ள சம்பரான் மாவட்டத்தில், முசாபர்பூர்-மோதிகாரி டிவிசனில் இந்த நாசவேலை நடந்து இருக்கிறது. அசாம் மாநிலம் பரூனியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கொண்டா என்ற இடத்துக்கு டீசல் நிரப்பப்பட்ட 48 "டேங்கர்''களை இணைத்துக்கொண்டு, ஒரு சரக்கு ரெயில் நேற்று அதிகாலையில் சென்றது.
அந்த ரெயில் பீகார் மாநிலம் மோதிகாரி என்ற ரெயில் நிலையத்தை தாண்டி பிப்ரா என்ற ரெயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளத்தில் 200 மாவோயிஸ்டுகள் கூடி, கண்ணிவெடிகளையும், வெடிகுண்டுகளையும் தண்டவாளத்தின் கீழ் மறைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் அருகே சென்று புதர்களில் பதுங்கி கொண்டனர்.
இந்த நிலையில் அந்த தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வந்தது. உடனே மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் ரிமோட் மூலம் கண்ணிவெடிகளை வெடிக்கச்செய்தனர். இதனால் சரக்கு ரெயிலில் இணைக்கப்பட்டு இருந்த பெட்டிகளில் 14 டீசல் வேகன்கள் வெடித்து சிதறி எரிந்தன.
இதை நேரில் பார்த்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ரெயில்வே அதிகாரிகளும், தீ அணைக்கும் படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பாதிக்கப்படாமல் இருந்த 35 "டேங்கர்''களை, மீட்பு குழுவினர் தனியாக பிரித்து விட்டனர். எனவே அந்த டேங்கர்கள் எரியாமல் தப்பின. இந்த பயங்கர நாசவேலை பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாவோயிஸ்டுகளின் நாசவேலை காரணமாக 40 அடிக்கு தண்டவாளம் வெடித்து சிதறி விட்டது. ஒவ்வொரு டேங்கரிலும் தலா 65 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தில் 8 லட்சத்து 45 ஆயிரம் லிட்டர் டீசல் எரிந்து நாசமாகி விட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி.
சோனாப்பூர், கோரக்பூர் ஆகிய இடங்களில் இருந்து ரெயில்வே கிரேன்களை கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட டேங்கர்களை அப்புறப்படுத்தினார்கள். தீ அணைக்கும் படையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த நாசவேலை காரணமாக அந்த வழியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டடது. சம்பவ இடத்தில் இருந்து மாவோயிஸ்டுகளின் துண்டு பிரசுரங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
இவ்வாறு ரெயில்வே அதிகாரி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக