நீர்வழிந்தோட தடையாகவுள்ள கட்டடங்களை அகற்ற நடவடிக்கை: நிவாரணம் இரட்டிப்பு அதிகரிப்புஎந்தவொரு வெள்ள நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நீண்டகாலத் திட்டமொன்று மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது :-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தொகை அதிகரித்து வருவதோடு எதிர்வரும் நாட்களில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆறுகள், கால்வாய்கள் என்பவற்றுக்கு அருகிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகில் நிலைகொண்டுள்ள ‘லைலா’ சூறாவளியினால் இலங்கைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் சூறாவளி நிலைமை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்பொழுது இரத்தினபுரி, நில்வளா கங்கை, களுகங்கை என்பவற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழை பெய்யத் தொடங்கியதும் ஆறுகள் பெருக்கெடுத்து, வெள்ள அபாயம் அதிகரிக்கலாம்.
வெள்ளநீர் வடிந்து செல்வதற்காக வடிகால் கட்டமைப்புகளை சுத்திகரிக்கவும் நீர் வடிந்து செல்வதற்கு தடையாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிகால்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் மாதத்தில் அடுத்த மழை தொடங்குவதற்கு முன்னர் கால்வாய்களை திருத்தவும் அவற்றை நிர்வகிக்கவும் உள்ளோம். கால்வாய்களுக்கு அருகில் உள்ளவர்களை தற்காலிக இடங்களுக்கு அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. கால்வாய்களைத் திருத்த பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டாலும் அவை நிர்வகிக்கப்படாததால் வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 80 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 25 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களி னூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் நிதி தேவைப்பட்டால் திறைசேரியினூடாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இவர்களுக்கு உணவு வழங்குவதற்காக வழங்கப்படும் தொகையை இரட்டிப்பாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக