15 ஏப்ரல், 2010

அமெரிக்கா-இஸ்ரேல் ஆகியவை ஈரான் மீது விமான தாக்குதல் நடத்துவதற்கு சம்மதிக்க மாட்டோம் ரஷியா அறிவிப்பு






ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் விமான தாக்குதல் நடத்துவதற்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று ரஷியா அறிவித்துள்ளது.

அமெரிக்கா எதிர்ப்பு

ஈரான் நாடு அணுஆராய்ச்சி நடத்தி வருகிறது. அதோடு அணுஉலை கூடங்களையும் அது அமைத்து வருகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் பணியையும் ஈரான் செய்து வருகிறது. இதனால் அது அணுஆயுதம் தயாரிக்கப்போவதாக கருதும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மின்உற்பத்திக்காக தான் அணுசக்தியை பயன்படுத்த இருக்கிறோம். ஆயுதம் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதை அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஏற்கவில்லை. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளன. இதற்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான பணிகளுக்கு அணுசக்தியை பயன்படுத்தி கொள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது. இதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் கூறி உள்ளது.

விமான தாக்குதல்

அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துவதற்கும், ஆயுதம் தயாரிக்க பயன்படுத்துவதற்கும் லேசான வேறுபாடு தான் உள்ளது. இதனால் மின்சக்திக்காக பயன்படுத்தும் அணுசக்தியை ஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

இதனால் ஈரானை பணிய வைக்க அந்த நாட்டில் உள்ள அணுஉலை கூடங்கள் மீது விமான தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணமும் அமெரிக்காவுக்கு உள்ளது. அதனால் தான் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ராணுவ ரீதியில் தீர்வு காண்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதை ஒதுக்கித்தள்ள முடியாது என்று அமெரிக்க தலைவர்கள் கூறி வருகிறார்கள். விமான தாக்குதலை உலக நாடுகளின் சம்மதத்தோடு செய்ய அமெரிக்கா நினைக்கிறது.

சம்மதிக்க மாட்டோம்

அமெரிக்காவின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட ரஷியா இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்று தெரிவித்து உள்ளது. ரஷிய ராணுவ தளபதி ஜெனரல் நிக்கோலாய் மகரோவ் இதுகுறித்து கூறியதாவது:-

ஈரானின் அணு சக்தி திட்டம் கவலை அளிக்கிறது. இது அணுஆயுத பரவலுக்கு வழிவகுக்கும். இது குறித்து உலகநாடுகளுக்கு உள்ள கவலையை ஈரான் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கவலையை நீக்கும்படியான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும்.

உந்துதல்

ஈரான் அணுஆயுதத்தை தயாரிக்குமானால், அது மற்ற நாடுகளுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தும். அந்த நாடுகளுக்கும் அணுஆயுதம் தயாரிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்காக அந்த நாட்டின் மீது விமான தாக்குதல் நடத்துவதை எங்களால் ஏற்க முடியாது. அதற்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.

இவ்வாறு ரஷிய ராணுவ தளபதி நிக்கோலாய் மகரோவ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக