ராஜீவ் கொலை தொடர்பாக பத்மநாதனை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்; இலங்கையிடம் இந்தியா கோரிக்கை
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் குமரன் பத்மநாதன். கே.பி. என்றழைக்கப்பட்ட இவர்தான் விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி அனுப்பி வந்தார்.
ஈழத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப் பட்டதும் இவர் திடீரென விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இனி நான்தான் தலைவர் என்று அறிவித்துக் கொண்டார். மலேசியாவில் இருந்த அவரை சிலநாடுகள் துணையுடன் இலங்கை அசு கடந்த ஆண்டு பிடித்துச் சென்றது.
கொழும்பில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் தற்போது சிங்களர்களுக்கு உதவும் வகையில் மாறி விட்டதாக கூறப்படுகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பத்மநாதன் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறார். அவரை இந்தியா கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனால் இலங்கை பத்மநாதனை ஒப்படைக்க மறுத்து விட்டது.
இலங்கை அதிகாரிகள் சாதகமான பதில் சொல்லாததால் சி.பி.ஐ. அதிகாரிகள் சற்று அதிருப்தியுடன் இருந்தனர். தற்போது பத்மநாதனிடம் விசாரிக்க அனுமதிக்க கோரி மீண்டும் இலங்கைக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதி உள்ளது.
அத்துடன் பத்மநாதனின் வங்கி கணக்குகளையும் தருமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழையும் இந்தியா கேட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் மரணச் சான்றிதழ் என்று ஒரு தாளில் இலங்கை அதிகாரிகள் எழுதி கொடுத்ததாக தெரிகிறது.
எனவே பிரபாகரனின் மரண சான்றிதழின் மூலப்பிரதியை தாருங்கள் என்று இந்தியா கேட்டுள்ளது. ஆனால் இலங்கை, இந்திய அதிகாரிகளின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக