15 ஏப்ரல், 2010

சர்வதேச கல்விப் பிரசார வாரம் எதிர்வரும் 20 முதல் 27ஆந் திகதி வரை

‘தரமான பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்குங்கள்; அது அனைவரினதும் உரிமை' என்னும் கோரிக்கையை முன்வைத்து இவ்வருடத்துக்கான சர்வதேச கல்விப் பிரசார வாரம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இவ்வாரத்தின் போது மலையக கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என்ற விடயம் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வலியுறுத்தப்படவுள்ளதாக பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார் .

சர்வதேச கல்விப் பிரசார வார செயற்பாடுகள் குறித்து பிரிடோ நிறுவன பணியாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமார்வு ஹட்டனில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"இம்முறை கல்விப் பிரசாரத்திற்கான செயற்பாட்டு வாரம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையாகும். தற்போதைய புள்ளி விபரங்களின் படி உலகில் 74 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையிலும் 774 மில்லியன் வளர்ந்தவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாகவும் உள்ளனர்.இவர்கள் அனைவரும் வறுமையில் வாடுபவர்கள்.

கல்வி பெறாதவரை, அவர்கள் தொடர்ந்தும் வறுமையிலேயே வாடவேண்டியிருக்கும். இந்த நிலைமையை மாற்றியாக வேண்டும் என்ற உயாந்த நோக்கத்துடனும் 2015 ஆம் ஆண்டில் உலகில் அனைத்து சிறுவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் உலக கல்வி பிரசார இயக்கம் 2003 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பிரசார இயக்கம், வருடா வருடம் ஏப்ரல் மாதம் மூன்றாம் கிழமையை உலக செயற்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தி, அனைவரும் கல்வி பெற முழு உலகமும் குரல் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறது.

கடந்த காலங்களில் உலக கல்விப் பிரசார வார நிகழ்வுகளின் போது ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாக பல உலக நாடுகள் பாடசாலை கட்டணங்களை நீக்கியதால் பல மில்லியன் மாணவர்கள் பாடசாலை செல்ல முடிந்தது. ஆயினும் அதிகரித்த மாணவர் தொகைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படாததாலும் கல்வி அபிவிருத்திக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யாததாலும் இம்மாணவர்களுக்குத் தரமான கல்வியை பெற முடியவில்லை.

இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு உலக கல்விப் பிரசார இயக்கம் இவ்வருடம் ‘தரமான பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்குங்கள்; அது அனைவரினதும் உரிமை' என்னும் கோரிக்கையை முன்வைத்து அக்கோரிக்கைக்கு ஆதரவாக உலக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் எனக் கேட்டுள்ளது. பிரிடோ நிறுவனம் கல்விப் பிரசார இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 2003 ஆம் ஆண்டு முதலே மலையக பகுதிகளில் கல்விப்பிரசார செயற்பாட்டு வாரத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி வந்திருக்கிறது.

இம்முறை கல்விப்பிரசார வாரத்தின் போது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் எமது ஒரே குறிக்கோள்;அனைவருக்கும் கல்வி” என்ற சுலோகத்தை பிரபல்யப்படுத்துவார்கள். இந்தப் பின்னணியில் இந்த நாட்டில் கல்வித்துறையில் பின்தங்கிய மக்கள் என்ற வகையில் உலக கல்விப் பிரசார இயக்கத்தில் அவர்களை கலந்து கொள்ள செய்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுவது அவசியமாகும்.

மலையத்தின் கல்வி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். பிரதேச சபைகள் மாகாண சபைகள், நாடாளுமன்றம் ஆகிவற்றில் மலையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் மலையக கல்வி நிலையை மேம்படுத்துவற்கு தங்கள் நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் மலையக கல்வியை மேம்படுத்துவதற்காக அரசிடமிருந்து அதிக நிதி ஒதுக்கீடுகளை பெற முயற்சி செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தரமான பயற்சி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் - போன்ற கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் மூலம் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சிகளையும் பிரிடோ நிறுவனம் கல்விப் பிரசார செயற்பாட்டு வாரத்தின் போது முன்னேடுக்கத் திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக