15 ஏப்ரல், 2010

வடக்கு கிழக்கில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் : இராணுவப் பேச்சாளர்


இடம்பெயர்ந்து வாழும் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி இராணுவம், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார் என அரச இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும்,

"இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பிரதேசங்களில் வாழும் பொதுமக்களினதும், அரச மற்றும் தனியார் வர்த்தக சமூகத்தினரதும் பூரண ஒத்துழைப்புடன் இராணுவம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பலவற்றை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பல்வேறு சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் வேண்டுகோளுக்கிணங்க மனிக்பாம் மற்றும் கதிர்காமர் நிவாரணக் கிராமங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஞாயிறன்று இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் மிகக் கவனமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இந்நடவடிக்கைகள் நிறைவு பெறுமென நம்புகின்றோம்.

எவ்வாறெனினும் இம்மாதத்தில் கணிசமானோரை மீள்குடியேற்ற முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோரில் சுமார் 15,000 பேரளவில் தினமும் வெளியில் செல்கின்றனர். அவர்களில் பலர் பல்வேறு தொழில்களில் ஈடுபவதுடன் தமது உறவினர்கள் நண்பர்களையும் சந்தித்து வருகின்றனர்.

அதற்கான அனுமதியூம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தகையோருக்கான நிவாரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக