24 மார்ச், 2010

திருடர்களைத் துரத்திப் பிடித்த பொது மக்கள் : ஏழாலையில் சம்பவம்



ஏழாலைப் பகுதியில் கத்தி முனையில் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற திருடர்களை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் ஆலயத்திற்குச் சென்று விட்டுத் தனிமையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்மணியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் கத்திமுனையில் பயமுறுத்தி சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.

பெண்மணி கூக்குரலிட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் திருடன் சென்ற பாதையை நோக்கிச் சென்றனர். சிலர் தமது சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்றனர்.

திருடர்கள் சென்ற பாதை, ஒரு வீட்டுடன் முடிந்த நிலையில், இவர்கள் தமது பாதையை மாற்றிச்செல்ல முயன்ற போது, பின் தொடர்ந்து வந்த மக்கள் திருடர்களைக் கண்டுபிடித்தனர். அவ்வேளை, திருடர்கள் தம்மைப் பிடிக்க வந்தவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் தாக்கியும் உள்ளனர்.

பொது மக்கள் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்து சென்று திருடர்கள் இருவரையும் பிடித்து, சுன்னாகம் பொலிசில் ஒப்படைத்தனர். சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வண்ணார்பண்ணை ஆலயத்தில் திருட்டு

அதேவேளை, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள வண்ணார்பண்ணை நாச்சிமார் ஆலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நுழைந்த திருடர்கள் அங்கிருந்து பெறுமதியான நகைகள் மற்றும் பல பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

தற்போது அங்கு துர்க்கையம்மனுக்கான ஆலயம் கட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளுக்காக விடப்பட்ட பாதைகள் ஊடாக ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நகைககள், பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக