24 மார்ச், 2010

கணிப்பொறித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-​ இஸ்ரேல் முடிவு




ஜெருசலேம், ​​ மார்ச் 23: கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும்,​​ இஸ்ரேலும் முடிவெடுத்துள்ளன.

​ இஸ்ரேலுக்கு 3 நாள் அரசு முறை பயணமாகச் சென்றுள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருதிவிராஜ் சவாண்,​​ திங்கள்கிழமை அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டேனியலை சந்தித்துப் பேசினார்.

​ இந்தச் சந்திப்பின் போது,​​ அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் இரு நாடுகளிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.​ நானோடெக்னாலஜி,​​ உயிரிதொழில்நுட்பம்,​​ நீர்மேலாண்மை,​​ கணிதம்,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய 5 துறைகளிலும் ஒத்துழைப்பை மிகுதிப்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

​ ​ முக்கியமாக வரும் ஆண்டுகளில் கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

​ ""கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் இந்தியாவும்,​​ இஸ்ரேலும் திறன்மிக்க நாடுகளாக உள்ளன.​ இதைக் கருத்தில் கொண்டே இவ்விரு துறைகளிலும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க முடிவெடுத்துள்ளோம்'' என்று இஸ்ரேல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டேனியல் தெரிவித்தார்.​​ இதுகுறித்து பிருதிவிராஜ் சவாண் கூறுகையில்,​​ கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன.​ இரு துறைகளிலும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக கபில் சிபல் அறிவியல் அமைச்சராக இருந்தபோதே பொது நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

​ பிருதிவிராஜ் சவாண் இஸ்ரேலில் உள்ள பல்வேறு முக்கிய கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.​ அங்கு 40-க்கு மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றும் வெஸ்மான் அறிவியல் மையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.

​ இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது,​​ இஸ்ரேலில் உள்ள ஏராளமான அறிவியல் மையங்கள் இந்திய ஐஐடிகளுடன் இணைந்து ஆராய்ச்சியை மேற்கொள்ள பெரிதும் விரும்புகின்றன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக