24 மார்ச், 2010

இடம்பெயர் மக்கள் வாக்களிக்க விசேட கரும பீடம் : வன்னி தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை





வாக்களிப்பதற்குத் தகுதி பெற்ற இடம்பெயர்ந்தவர்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வவுனியாவில் விசேட கருமபீடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார் என அரச இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

2008ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு வாக்களிப்பதற்குத் தகுதி பெற்ற இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கென விசேட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இலவச போக்குவரத்து மற்றும் இவ்விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் என்பன செய்து கொடுக்கப்படும்.

எனினும் இடம்பெயர்ந்தவர்களுள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதும் விண்ணப்பிக்கத் தவறிய அல்லது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மக்களுக்கும் விசேட வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கவும் வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி வவுனியா மெனிக்பாம், செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களிலும் தனித்தனியே விசேட கருமபீடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா அரச அதிபர் அலுவலகத்திலும் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக