சரத் பொன்சேகாவுக்கு மாஜி நீதிபதி வக்காலத்து
கொழும்பு: "சரத் பொன்சேகாவை தொடர்ந்து காவலில் வைத்துள்ளது, சட்ட விரோதமானது' என, இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் சில்வா கூறியுள்ளார். இலங்கை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சரத் சில்வா கூறியதாவது: ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை இலங்கை ராணுவம் கைது செய்து, காவலில் வைத்துள்ளது. இலங்கை சட்டப்படி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபரை, 24 மணி நேரத்துக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், பொன்சேகாவை கைது செய்து, ஒரு மாதம் ஆகப் போகிறது. இன்னும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை. இது அரசியல் சட்டத்தை மீறும் செயல்.
சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளது. ஆனால், பொன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசு, மனித உரிமை சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது. கைது செய்யப்படும் நபரிடம், அதற்கான காரணத்தை போலீசார் தெரிவிக்க வேண்டும் என்பது சட்டம். பொன்சேகாவை கைது செய்த போது, கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு சரத் சில்வா கூறினார். இலங்கை மீடியா துறை அமைச்சர் லக்ஷ்மண் யெபா அபெயவர்த்தனா கூறுகையில்,""பொன்சேகா கைது, சட்டப்படி தான் நடந்துள்ளது. எந்த சட்ட மீறலும் நடக்கவில்லை. முன்னாள் தலைமை நீதிபதியின் கருத்து வருத்தம் அளிக்கிறது,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக