21 டிசம்பர், 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும்



செயற்படுவது ஆரோக்கியமான விடயம்: அரசாங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் ஒன்றிணைந்து செயற்படுமாயின் அதனை ஆரோக்கியமான ஒரு விடயமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நோக்குகின்றது. இரு தரப்பினரும் இணைந்து அரசாங்கத்துடன் செயற்பட முன்வருவார்களாயின் அவர்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவர்கள் இணைந்து ஒரு தீர்வு யோசனையினை முன்வைப்பார்களேயானால் அது குறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகளும் அண்மையில் சந்தித்து பேசியதுடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர். இதற்கென இரு தரப்பின் சார்பிலும், ஆறு பிரதிநிதிகளைக் கொண்ட உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துக் கேட்டபோதே அமைச்சர் டலஸ் அழகபெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில் :

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சிறந்த நட்புறவான உறவை பேணிவருகின்றது. அதாவது தற்போதைய காலகட்டத்தில் சிறந்த உறவு மலர்ந்துள்ளது என்று கூறலாம். அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலமே சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொண்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதனையும் நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.

மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படவும் ஒத்துழைப்புடன் முன் செல்லவும் எமது அரசாங்கம் எப்போதும் பின்நின்றதில்லை. மாறாக மக்களின் பிரதிநிதிகள் அல்லாத புலிகளுடன் தான் எங்களுக்கு பிரச்சினை காணப்பட்டது. அதனடிப்படையிலேயே தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆகியவை ஒன்றிணைந்து செயற்படுமாயின் அதனை ஆரோக்கியமான ஒரு விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அவ்வாறு அவர்கள் இணைந்து ஒரு யோசனையுடன் வருவார்களாயின் அது தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படலாம்.

ஆனால் அவ்வாறு அவர்கள் இணைந்து அரசாங்கத்துடன் செயற்படுவதா? என்பதனை அவர்களே தீர்மானிக்கவேண்டும். அது அவர்கள் சார்ந்த விடயமாகும். மேலும் தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற தரப்புக்குள் உள்ளவர்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் நின்றவர்கள்.

எனவே தமிழ் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து செயற்படுமாயின் அதனை சிறந்த கண்ணோட்டத்துடனேயே பார்ப்போம். அவ்வாறு ஆரோக்கியமாக பார்க்கின்ற தலைவர் ஒருவரே தற்போது எமக்கு இருக்கின்றார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக