21 டிசம்பர், 2010

தப்பியோடிய படையினர் 50 ஆயிரம் பேரை கைதுசெய்ய நடவடிக்கை





தப்பியோடிய 50 ஆயிரம் படையினரை கைது செய்ய நாட்டில் பல முனைகளிலும் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் அனைவருக்கும் இராணுவச் சட்டத்தின் கீழ் பதவி, தராதரம் பாராது தண்டனை வழங்கப்படுமே தவிர எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவெல தெரிவித்தார்.

சரணடைய வழங்கப்பட்ட கால எல்லையை தப்பியோடிய படையினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அத்தோடு தலை மறைவாக உள்ள முன்னாள் படையினர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்தி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெகவல கூறுகையில், கடந்த யுத்த காலப்பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் படைகளிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இவர்களை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு சுயமாக சரணடையும் வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி உத்தியோகபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கும் ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான தப்பியோடிய வீரர்கள் சரணடைய வழங்கப்பட்ட கால அவகாசத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இராணுவத்திலிருந்து தப்பியோடி சிவில் சமூகத்துடன் வாழ்வது சட்டத்திற்கு முரணானது மட்டுமல்ல தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலான விடயமாகும். அத்தோடு நாட்டில் அண்மையில் நடைபெற்ற பல குற்றச் செயல்களுடனும் தப்பியோடிய இராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தொடர்ந்தும் இவர்களை சிவில் சமூகத்துடன் சுதந்திரமாக நடமாட அனுமதியளிக்க முடியாது. எனவேதான் தப்பியோடிய இராணுவ வீரர்களை கைது செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளோம். இனி கைது செய்யப்படும் அனைவரும் இராணுவச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு பின்னர் புனர் வாழ்வளிக்கப்படுவார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக