20 டிசம்பர், 2010

திடமான நம்பிக்கை இருப்பின் நிபுணர்கள் குழு வருகை குறித்து அரசு அச்சப்படத் தேவையில்லை: த.தே.கூ

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்ற திடமான நம்பிக்கை அரசாங்கத்திடம் இருக்குமானால் ஐ.நா நிபுணர்கள் குழு தொடர்பில் கலவரமடையவோ அல்லது அச்சமடையவோ தேவையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றமை சந்தேகங்களை கிளப்பிவிடுகின்ற அதேவேளை ஐ.நா.வையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுகின்ற நிலைப்பாடாகவுமே இதனை நோக்க வேண்டியுள்ளது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பினையடுத்து நிபுணர்கள் குழு கற்றறிந்த பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ள அதேவேளை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ள அதேவேளை அதன் வருகையைத் தடுப்பதற்கு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேசமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இலங்கையில் மூக்கை நுழைக்கும் அளவுக்கு இங்கு பாரிய மனித உரிமை மீறல்கள் எதுவும் நடந்துவிடவில்லை என்று முன்னர் அறிவித்திருந்த அரசாங்கம் எந்தத் தரப்பினரும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க முடியும் என்றும் அண்மையில் அறிவித்திருந்தது.

அரசாங்கம் அறிவித்து வருகின்றதைப் போல் இங்கு எந்தவிதமான மனித உரிமை மீறல்களுமே இடம்பெற்றிருக்கவில்லையென்றால் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் எவரும் எந்தத் தரப்பும் சாட்சியமளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருந்தால் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் மற்றும் சாட்சியம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஒரு புறத்தில் அரசாங்கம் நிபுணர்கள் குழுவின் வருகைக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கின்ற அதேவேளை மறுபுறத்தில் சிவப்புக் கொடியும் காட்டப்படுவதானது சந்தேகங்களை கிளப்புகின்றன. அதாவது இவ்விடயத்தில் அரசாங்கத்திடம் இருவேறு கருத்துக்கள் காணப்படுவதே இதற்குக் காரணமாக அமைகின்றது.

இங்கு குற்றங்கள் இழைக்கப்படவில்லை. மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை, சட்டவிரோதங்கள் இடம்பெறவில்லை என்ற திடமான நம்பிக்கை அரசுக்கு இருக்குமானால் திறந்த மனதுடன் வெளிப்படைத் தன்மையுடன் நிபுணர்கள் குழுவின் வருகையை நோக்க முடியும். இதற்கு எழுகின்ற எதிர்ப்புக்கள் நன்மைகளை உருவாக்கப் போவதில்லை என்பது திண்ணமாகும். அத்துடன் இலங்கையில் நல்லிணக்கம் சாந்தி, சமாதானம், நல்லாட்சி என்பதும் இந்த எதிர்ப்புக்களால் கேள்விக்குறியாகவே அமையும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக