20 டிசம்பர், 2010

இலங்கை வரும் ஐ.நா. நிபுணர்களின் குழு எமக்கு எதிராக செயற்பட்டால் உடன் வெளியேற்ற வேண்டும்: ஹெல உறுமய


இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிர்ப்பை வெளியிடுவது "கோமாளி'த்தனமாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

இங்கு வரும் ஐ.நா நிபுணர் குழு எமக்கு எதிராக செயற்பாடுகளை மேற்கொண்டால் உடனடியாக அவர்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுடன் நட்புறவோடு செயற்பட ஐ.நா.வோ அல்லது உலக நாடுகள் தயாரென்றால் நாமும் நட்புறவுக்கரங்களை நீட்ட வேண்டும். ஐ.நா. குழு நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முன்வருவதை வரவேற்கின்றோம். எனவே இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதென்பது கோமாளித்தனமாகும்.

ஆனால் ஐ.நா. குழு எமது குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் எமக்கெதிரான கருத்துக்களையும் வெளியிட முனையுமானால் அதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறானதொரு நிலைமையில் இக் குழுவை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் புதியதொரு பிரச்சினையை உருவாக்க இடமளிக்கலாகாது. எமக்கு எதிராகவே இக்குழு அமைக்கப்பட்டது. எனவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் அணுக வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக