3 நவம்பர், 2010

நாட்டின் எப்பகுதியிலும் புதிய காவலரண்கள் அமைக்கப்படவில்லை

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்த பகுதிகளிலும் இராணுவம் புதிதாக காவலரண்கள் எதனையும் அமைக்கவில்லை என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவல தெரிவித்தார்.

வட பகுதியில் படையினர் புதிதாக இராணுவ காவலரண்களை அமைத்து வருவதாக கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரிவித்த அவர், அதனை முற்றாக மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த பிரதேசங்களிலுள்ள மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அவ்வப்போது தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் திடீர் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்; இதற்கு மாறாக புதிதாக நிரந்தர காவலரண்கள் எதுவும் அமைக்கப் படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே திடீர் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட் டினார்.

நாட்டினதும் மக்களினதும் நன்மைகளை கருத்திற் கொண்டே இவ்வாறான திடீர் சோதனைச் சாவடிகள் அவ்வப்போது அமைக்கப்படுவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் மக்களுக்கு எந்தவொரு இடையூறுகளையும் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் போதைப்பொருள் பாவனைகளையும், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்கும் பாரிய நடவடிக்கைகளை பொலிஸார் உட்பட பாதுகாப்புப் படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், இது போன்ற நடவடிக்கைகளை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறான திடீர் சோதனைச் சாவடிகள் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இது தவிர நிரந்தர சோதனைச் சாவடிகளை புதிதாக அமைக்கும் எந்த ஒரு தேவையும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடையாது என்றார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புப் படையினரும் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக