13 செப்டம்பர், 2010

அகதிகளின் தகவல் அடங்கிய கணினி திருட்டு : கனேடியத் தமிழ் காங்கிரஸ் தகவல்

சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த இலங்கை அகதிகளின் தகவல்கள் அடங்கிய கணினி திருடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதிகளின் பயண ஆவணங்கள், தொடர்பு எண்கள், பிறப்பு சான்றிதழ்கள் என்பனவும் திருடப்பட்டுள்ளன.

டொரன்டோவில் காரியாலயத்தினுள் கடந்த சனிக்கிழமை புகுந்த சிலர், இலங்கை அகதிகள் குறித்த தகவல்கள் பதியப்பட்டிருந்த கணினியை திருடிச் சென்றுள்ளாதாக தமிழ்த் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குமிடையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளதாகத் கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாளபிள்ளை தெரிவித்துள்ளார்.

கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இலங்கை அகதிகள் குறித்த விவரங்களைத் திரட்டுவதற்குத் தடைவிதித்திருந்தது.

இந்நிலையிலேயே இந்தத் தகவல்கள் திருடப்பட்டுள்ளன எனவும், இதனால் அகதிகளின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரியாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து சிலர் குறித்த தகவல்களைத் திருடிச் சென்றுள்ளமையை, டொரன்டோ காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது ஒரு திட்டமிடப்பட்ட திருட்டு என தெரிவித்துள்ள அவர், மேற்படிக் காரியாலயத்தில் பல கணினிகள் இருந்த போதும், குறித்த தகவல்கள் அடங்கியது மட்டும் திருடப்பட்டிருப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கையில் உள்ள அகதிகளின் குடும்பங்கள், அவர்களுடன் தொடர்புகளை பேணி வந்தனர். எனவே உடனடியாக இது தொடர்பாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக