13 செப்டம்பர், 2010

ஐ.தே.க. தலைமையகத்துக்கு முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள் சத்தியாக்கிரகம்?

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு எட்டப்படுகின்ற வரையில் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு அதன் தலைமைத்துவம் தீர்வு காண்பதற்கு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையெனத் தெரிவித்து அக்கட்சியின் எம்.பி.க்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என சகல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டமும் ஏற்பாடாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடந்த 8 ஆம் திகதி புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அதேவேளை மேலும் 25 எம்.பி.க்களைக் கொண்ட குழு பாராளுமன்றத்தில் தனித்து செயற்படவிருப்பதாகவும் அந்தக் குழுவிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய விருப்பதாகவும் அந்தக் குழு அறிவித்துள்ளது.

அத்துடன் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கோ அல்லது உள் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்கோ தலைமைத்துவம் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் தலைமைத்துவத்தை மாற்றியமைத்து கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக