13 செப்டம்பர், 2010

அரேபியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் சென்றபோது விமானத்துக்குள் ரகசியமாக ஆண் குழந்தை பெற்ற பெண்; குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு ஓட்டம்









அரேபிய நாட்டில் இருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். இதை தொடர்ந்து விமானத்துக்குள் இருந்த குப்பைத் தொட்டியை சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர்கள் அதை வெளியே எடுத்து வந்தனர்.

விமானத்தை விட்டு இறங்கியதும் அந்த குப்பையை ஊழியர்கள் தரம் பிரித்தனர். அப்போது அதில் சிறிது நேரத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை ஒன்று டிஷ்சு பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விமான நிலைய டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். உடனே நர்சுடன் டாக்டர் அங்கு விரைந்து வந்தார். பேப்பரில் சுற்றப்பட்டிருந்த அந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

அக்குழந்தை சிறிது நேரத்துக்கு முன்புதான் பிறந்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ரத்தம் கூட காயாமல் அப்படியே இருந்தது. விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் பயணி ரகசியமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

உடனே அக்குழந்தையை மணிலா விமான நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து நர்சுகள் சுத்தம் செய்தனர். மேலும் உடலை பரிசோதித்தனர். அது மிகவும் உடல் நலத்துடன் உயிருடன் இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கப்படடது. அதை குடித்தவுடன் அக்குழந்தை லேசாக அழ தொடங்கியது. பின்னர் அக்குழந்தை நினோய் அகினோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சமூகசேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே விமானத்தில் கள்ளத்தனமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை கண்டு பிடிக்கும்படி பிலிப்பைன்ஸ் சமூக நலத்துறை செயலாளர் சரிமன் உத்தரவிட்டுள்ளார்.

அப்பெண் யார் என கண்டறிந்து அவளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், இது ஒரு கிரிமினல் குற்றம் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக