25 செப்டம்பர், 2010

பொருளாதாரக் கொள்கையின் ஊடாக அபிவிருத்தி இலக்கை இலங்கை விரைவில் எட்டும் ஜனாதிபதி




எமது நாட்டையும் அதன் பொருளாதாரத் தையும் அபிவிருத்தி செய்துவரும் நிலையில் அதற்கு நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை வரவேற்கிறோம். சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ச்சி மூலம் சர்வதேச சமூகத்துடன் கூட்டாக செயல்பட நாம் தயாராக இருக்கிறோம்.

எமது பொருளாதார கொள்கையின் ஊடாக அபிவிருத்தி இலக்குகளை சுலபமாக பெறுவதற்குரிய நிலையில் நாம் இருக்கிறோம். இதனை இலங்கை விரைவிலேயே நிறைவேற்றும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. பொதுச் சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான சவால்களை அது இனங்கண்டுள்ளது. அதில் பாரிய சவாலாக இருப்பது எமது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். இந்நிலையில் அதற்காக இவ்வருட முற்பகுதியில் கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு ள்ளது.

அது பொறுப்புத் தன்மையுடனான கொள்கைக்கு முற்றிலும் கட்டுப்பட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய போது கூறினார்.

ஐ. நா. பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:- எனது இரண்டாவது பதவிக் காலம் முதலாவது பதவிக் காலத்தை விட பெரிதும் மாறுபட்டது. 2005 ஆம் ஆண்டு நான் முதலில் தெரிவு செய்யப்பட்ட போது எனது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதாக வாக்குறுதி வழங்கினேன். அதை நிறைவேற்றியுள்ளேன். சில காலத்துக்கு முன் அங்கு கனவாக மட்டுமே இருந்த சமாதானம் இப்போது அங்கு நனவாகி யுள்ளது.

எனது இரண்டாவது பதவிக் காலத்தில் சமாதானம் மற்றும் சபீட்சத்தை ஸ்திரப்படுத்துவதுடன் பயங்கரவாதம் மீண்டும் ஒருமுறை தலைதூக்க இடமளிக்க மாட்டேன் என்று வாக்குறுதியை எனது மக்களுக்கு வழங்குகிறேன்.

விரைவிலேயே மறந்துபோன உண்மை என்னவென்றால்; நாம் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு செயற்பட்ட சிறந்த நிதி உதவியை பெற்று, நன்றாக இயங்கிய ஒரு பயங்கரவாத இயக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதாகும். இது ஏனைய நாடுகளிலும் தனது வலையை விரிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

மேற்கு நாடுகள் அண்மைக் காலத்தில் அனுபவித்துவரும் பயங்கரவாதத்தின் கொடூரத்தை இலங்கை மக்கள் சுமார் 30 வருடங்கள் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் பேர் அதில் உயிரிழந்தனர்.

அவ்வாறு கொல்லப்பட் டவர்களில் இலங்கை ஜனாதிபதி ஒருவரும், முன்னோக்க தரிசனத்துடன் கூடிய ஒரு இந்தியத் தலைவரும், நூற்றுக்கணக்கான புத்தி ஜீவிகளும், அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

வழிதவறிப் போன சிலருக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள். அதற்கு மாறாக எம்முடன் கைகோர்த்துக்கொள்ளுங்கள், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திய வண்ணம் புதிய பரிமாணங்களை நாம் எட்ட முடியும்.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அதன் காயங்களை ஆற்றுவதற்குமான நடைமுறை எமக்குள்ளேயே உருவாக வேண்டும் என்று நாம் நம்புகிறோம். சரித்திரம் நமக்கு ஒன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறது என்றால், அது வெளியில் இருந்து திணிக்கப்பட்ட தீர்வுகள் மனக்கசப்பை தோற்றுவித்து இறுதியில் தோல்வியையே ஏற்படுத்தும் என்பதாகும். அதற்கு மாறான எமது உள்நாட்டு நடைமுறையானது எமது மக்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.

எமது நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்து வரும் நிலையில் அதற்கு நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை வரவேற்கிறோம் சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் பரிமாண வளர்ச்சி மூலம் சர்வதேச சமூகத்துடன் கூட்டாக செயற்பட நாம் தயாராக இருக்கிறோம்.

சமாதானத்தின் பெறுபேறாக எமது பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்கிறது. கடந்த காலாண்டு காலத்தில் எமது வளர்ச்சி நிலையாகவும் ஸ்திரமாகவும் உள்ளதுடன், 8 சதவீதத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி வீதத்தை காட்டி நிற்கிறது. பண வீக்கம் குறைந்த நிலையிலும் வட்டி வீதங்களும் குறைந்து காணப்படுகின்றன. கடந்த 5 வருடங்களில் எமது தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. அதனை மேலும் முன்னேற்றச்செய்து 2016 ஆம் ஆண்டளவில் அதனை தற்போது இருப்பதிலும் இரட்டிப்பாக்குவது எமது குறிக்கோளாகும்.

மஹிந்த சிந்தனை, எதிர்கால நோக்கு என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியான உட்கட்டமைப்பை கொண்டிருக்கும். எனது எதிர்கால தரிசனத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தேசிய, மாகாண மற்றும் கிராம மட்டங்களில் இடம்பெறும் இந்த தரிசனம் எமது முழுமையான சமூகத்தின் அபிவிருத்தியை அர்த்தமுள்ளதாக்கும்.

அதேவேளை எனது நாட்டின் பொருளாதார தந்திரோபாயம் புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றக்கூடிய நிலையில் இருப்பதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். ஐக்கிய நாடுகளின் காலக்கெடுவுக்கு முன்னரே அதனை இலங்கை நிறைவேற்றும் என்று நம்பலாம்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு இலங்கை பங்களிப்பு வழங்கிய 50ஆவது நிறைவு 2010 ஆம் ஆண்டு எனக் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எமது படையினரும் பொலிஸாரும் இன்று சிறப்பான யுத்தப் பயிற்சியுடன் எந்தச் சவாலான நிலையிலும் கடமையாற்றக்கூடிய திறனுடன் உள்ளனர். ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்து உதவும் எமது விருப்பத்தை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

எமது பிராந்தியத்தில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அழிவுகள் முறையான செயற்பாட்டின் தேவையை கோடிட்டுக் காட்டுகின்றன. இதற்கு கூட்டான பங்களிப்பு தேவைப்படுகிறது. அதன் மூலமே மனித வேதனையைக் குறைக்க முடியும். சுவாத்திய மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை இன்று அனைத்து நாடுகளினதும் அவதானத்தை ஈர்க்கும் விடயமாகியுள்ளதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் அரசியல் விவகாரங்களில் பலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விடயம் தாமதமின்றி தீர்க்கப்பட்டு, அடுத்த வருட பொதுச்சபை கூட்டத்தில் பலஸ்தீனம் பூரண அங்கத்துவ நாடாக கலந்துகொள்ளும் என்று நாம் நம்புகிறோம்.

உலகளாவிய ரீதியில் இன்று ஒவ்வொரு நாடும் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. எனவே நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். தேவையான வேளையில் நாம் ஒருவரோடு ஒருவர் ஆலோசனையுடன் செயற்பட முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. பொதுச்சபையில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக