23 ஆகஸ்ட், 2010

படைத்தரப்பின் முன்னாள் உயரதிகாரிகள் தூதுவராக நியமனம்?

படைத்தரப்புக்களின் முன்னாள் உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் சிலரை இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

தூதுவர்களாக, படைத்தரப்பின் முன்னாள் உயரதிகாரிகள் மற்றும் முன்னாள் அரசியல் வாதிகளை நியமிப்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதே தவிர இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பிரதிபாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த மற்றும் முன்னாள் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட ஆகியோர் மலேசியா மற்றும் பிரிதானிய நாடுகளுக்கான தூதுவர்களா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மற்றும் பிரதியமைச்சர் மனோ விஜேரத்ன ஆகிய இருவரும் தூதுவர்களாக நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்டர்.

முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கருணாகொட நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக பணியாற்றிவருகின்றார். இதேவேளை முன்னாள் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தவிற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப்பட்டியல் வழங்குவதற்கு பெயர்குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் வெளிவிவகக்ஷிர அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவையும் தூதுவராக நியமிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சீனா,ரஷ்யா,பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளில் தூதுவர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் இரண்டொரு வாரங்களுக்குள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் விமானப்படை தளபதி டொனால் பெரேரா ரஷ்யா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் படைகளின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை தூதுவராக நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக