10 ஆகஸ்ட், 2010

ஜன செவன'வின் கீழ் 10 இலட்சம் வீடுகள் நாடளாவிய ரீதியில் 6 வருடங்களில் நிர்மாணம்


வீடுகளற்ற மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட மக்களுக்கு “ஜன செவன” வீடமைப்புத் திட்டத்தின் மூலம் 10 இலட்சம் வீடுகளை நிர்மாணித்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வீடுகளை எதிர்வரும் 6 வருடங்க ளுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் 65,000 வீடுகளையும் பெருந்தோட்டப் பிரதேசங்களில் 30,000 வீடுகளையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சின் செயற்பாட்டு மீளாய்வு நிகழ்வின் போது இது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வீடமைப்பு சம்பந்தமான வங்கிக் கடன்களின் வட்டி விகிதத்தையும் குறைப்பதுபற்றி உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை கருத்திட்டத்தின் கீழ் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள செயற்திட்டங்கள் மற்றும் அமைச்சின் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து இந்நிகழ்வின் போது ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

அமைச்சர் விமல் வீரவன்ச, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, அமைச்சின் செயலாளர் நிஸ்ஸங்க என். விஜயரத்ன உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் அமைச்சின் பல்வேறு துறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

பத்து இலட்சம் வீடுகளை அமைத்தல் என்ற அரசாங்கத்தின் இலக்கை நிறைவேற்றுவதற்காக தற்போது தேசிய உற்பத்தியில் 8 வீதமாகவுள்ள நிர்மாணக் கைத்தொழிலை 12 வீதமாக அதிகரிப்பது அவசியம். அத்துடன் வீடுகளை நிர்மாணிப்பதற்கான வங்கிக் கடன்களின் வட்டி வீதத்தை 8 வீதம் முதல் 10 வீதம் வரை வைத்திருப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்பவியலா ளர்களுக்கு நவீன பயிற்சிகளை வழங்கி அவர்களை நிர்மாணத்துறையில் பங்களிப்புச் செய்பவர்களாக மாற்றுவது சம்பந்தமாகவும் அவர்களின் தொழில் தன்மையை மேம்படுத்தும் விசேட செயற்திட்டமொன்று உருவாக்கப்படுவது சம்பந்தமாகவும் ஜனாதிபதி உயரதிகாரிகளுக்குப் பணிப்புரைகளை வழங்கினார்.

எதிர்கால வீடமைப்புத் திட்டங்களின் போது மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப கொழும்பு நகர வீடுகளின் 51 வீத சேரி வீடுகளுக்குப் பதிலாக 65,000 புதிய மாடி வீடுகளை நிர்மாணிக்கவும் 30,000 தோட்டப் பகுதி வீடுகளை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

அத்துடன் அரசாங்க மற்றும் தனியார் துறையினருக்கான வீட்டுத்திட்டமும் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, சகல அமைச்சுக்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் வீடுகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் தொடர்புபட்டதாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இதன்போது அரச காணிகளில் பலாத்காரமாக குடியிருப்போருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் வீடமைப்புத் திட்டத்தின் போது முறைப்படி விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமையளிக்கவும் வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக