10 ஆகஸ்ட், 2010

அரசாங்க காணிகளை கையகப்படுத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை -ஜனாதிபதி

தேசத்தின் மகுடம் கண்காட்சி எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் அதேவேளை அரசாங்க காணிகளை பலவந்தமாகக் கையகப்படுத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வீடு இல்லாத மற்றும் குறைந்த வசதிகள் கொண்ட வீடுகளை கொண்ட மக்களுக்காக ஜன செவன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆறு வருடங்களுக்குள் 10 இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

நிர்மாணம், பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகளின் அமைச்சின் செயற்றிட்ட அறிக்கை தொடர்பிலான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பத்து இலட்சம் வீடுகளை இலக்காக கொண்டே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது அதற்காக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற 8 வீதமான நிர்மாண வேலைகளை 12 வீதமாக அதிகரிப்பதற்கும் . வீடுகளை நிர்மாணிப்பதற்காக வங்கி கடன்களுக்கு அறவிடப்படுகின்ற வட்டியை 8 வீதத்திற்கும் 10 வீதத்திற்குள் இடையில் வைத்துக்கொள்வதற்குள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேபோல நிர்மாண துறையில் பணியாற்றுகின்றோர் புதிய அனுபவத்துடன் இலத்திரனியல் பணியாளராக செயலாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் அவர்களின் தொழிற்சார் தன்மையை அதிகரித்து கொள்வதற்கு விசேட வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தவேண்டும்.

வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போது மஹிந்த சிந்தனை கொள்கையின் பிரகாரம் கொழும்பு நகரத்தில் இருக்கின்ற 51 வீதமான குடிசை வீடுகளுக்கு பதிலாக புதிய மாடிக்கட்டிடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் பெருந்தோட்டங்களில் 30 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்குள் தனியார் துறையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவிருக்கின்றது. அத்துடன் சகல அமைச்சுகளும் தேசிய வீடமைப்பு அதிகார சபையும் இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்வாங்கப்படவேண்டும்.

அதேபோல தேசத்தின் மகுடம் கண்காட்சி இனி ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்னெடுப்பதனால் குறைந்த செலவில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன் அரசாங்க காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தியுள்ள நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து சட்டரீதியாக வீடுகளை கோருவோருக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக