20 ஜூலை, 2010

புகலிடக் கோரிக்கைக்கான தகைமையை நிரூபிக்கத் தவறுவோர் திருப்பி அனுப்பப்படுவர்

இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதால் குறைந்த எண்ணிக்கையானோருக்கே அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது.

புகலிட கோரிக்கைக்கான தகைமையை நிரூபிக்க தவறுவோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அவுஸ்ரேலிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்;

இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலும் இலங்கையில் நிலைமை முன்னேற்றமடைந்து வருகிறது என்று அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் நிறுவனத்தின் அகதிகள் தொடர்பான வழிகாட்டு நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளின் விண்ணப்பங்களை இப்பொழுது நுணுக்கமாக பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் நோக்கத்தை கொண்டுள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டின் பிரதம மந்திரி ஜுலியா கிலார்ட் விடுத்துள்ள எச்சரிக்கையில்: மக்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்லும் முகவர்களுக்கு பணத்தை கொடுத்து உயிராபத்தை எதிர்நோக்கி இவ்வளவு தூரத்தையும் கடந்து நீங்கள் அவுஸ்திரேலியாவில் வந்து இறங்கியதும் அநேகமாக நீங்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்டும் நிலைமையை எதிர்கொள்ளலாம்.

இலங்கை தொடர்பாக ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அகதிகள் தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டு நூலை மேற்கோள் காட்டிய பிரதமர் கிலார்ட் அகதிகள் ஏற்பு விகிதம் வீழ்ச்சியடையலாம் என்று கூறினார். இலங்கையிலிருந்து வருவோர் அனைவரும் அகதிகள் என்று கட்டுமேனியாக தீர்மானிப்பதற்கு பதிலாக சகல விண்ணப்பங்களையும் தனித்தனியாக பரிசீலனை செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதை பிரதமர் கிலார்ட் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிராந்தியத்திலுள்ள சக நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் மக்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டுவதென அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக