20 ஜூலை, 2010

கருணாநிதி ஆலோசனைப்படி இலங்கை தமிழர் நிலை அறிய அதிகாரிகள் குழு நியமனம் மன்மோகன்சிங் உறுதி

கருணாநிதி ஆலோசனைப்படி    இலங்கை தமிழர் நிலை அறிய    அதிகாரிகள் குழு நியமனம்    மன்மோகன்சிங் உறுதி

இலங்கை தமிழர் நிலை அறிய முதல்-அமைச்சர் கருணாநிதி ஆலோசனைப் படி அதிகாரிகள் குழு நியமிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்துள்ளார்.

மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருப்பதையொட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கட்சிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தின.

இதில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் பட்டேல், தேசிய மாநாட்டு கட்சி சார்பில் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்ற நாடாளுமன்ற கழக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

இலங்கையில் இடம் பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக காலதாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் துன் புறுத்தப்படுவதும், சுட்டுக்கொல்லப்படுவதும் தொடர்கிறது. இதைதடுத்திட பல முறை முதல்-அமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி வருகிறார். இதற்காக இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கையால் இலங்கை ராணுவம் தங்களது கொடுஞ் செயலை நிறுத்தவில்லை.

இதற்கு தீர்வு காண தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை அவர்களுக்கு உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் ஏற்படும் நிலையை உருவாக்க வேண்டும்.

இலங்கை தமிழர்கள் மீள் குடியேற்றத்திற்காக அவர்களுக்கு வீடு கட்டித்தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் இந்திய அரசு மூலம் 500 கோடி ரூபாயும், இரண்டாவதாக 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட இத்தொகை எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை.

இதற்காக முதல்- அமைச்சர் கருணாநிதி அண்மையில் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமைகளையும் கண்டறியவும் இந்திய அரசு தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்பு தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதோடு, பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவர்கள் திருப்தி அடையும் வகையில் அமைய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதையும் அறிந்து வர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஆலோசனை கூறியிருந்தார்.

முதல்-அமைச்சரின் இந்த ஆலோசனையை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்திய அரசின் சார்பில் மூத்த அதிகாரிகள் குழுவை நியமித்து இந்திய அரசு கொடுத்த நிதி இலங்கை தமிழர்களுக்கு முறையாக கிடைத்து அதன் பயனை முழுமையாக அவர்கள் அடைய வேண்டும்.

இலங்கையில் மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் அங்கே தமிழ் மக்கள் அல்லலூறாமல் தடுக்க உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.

இதற்கு பிரதமர் மன் மோகன்சிங் அளித்த பதில் வருமாறு:-

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

இந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்விற்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிந்திட அதிகாரிகள் குழுவை நியமித்து முறைப்படி அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக