20 ஜூலை, 2010

மஹிந்த சிந்தனையா? ஹெகலிய ரம்புக்வெலவின் சிந்தனையா? அரியநேத்திரன் கேள்வி

இந்த நாட்டின் செயற்பாடுகள் மஹிந்த சிந்தனையின் அடிப்படையிலா அல்லது ஹெகலிய ரம்புக்வெலவின் சிந்தனையின் அடிப்படையிலா தற்போது நடைமுறைபடுத்தப்படுகிறது என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்புகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தாந்தாமலை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் தொடர்ந்து பேசுகையில் வடக்கு கிழக்கு மகாணங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக குறைக்கப்படுமென்றும் அங்கிருந்து இராணுவங்கள் மீளழைக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்வை தோற்றுவிப்பதாக ஜனாதிபதி அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த போது எங்களிடம் கூறினார்.

அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்பும் இவ்வாறான கருத்தை வெளியிட்டார். ஆனால் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது என்றும் அங்கு மீளவும் இராணுவம் குவிக்கப்படும் என்றும் தனியார் காணிகள் இராணுவ முகாம்களுக்காக தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் மக்களை தொடர்ந்தும் அச்ச சூழ் நிலையில் வைத்துக் கொள்வதை அவர் விரும்புவதாகவே நான் பார்க்கின்றேன். யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் கடந்துவிட்டது இங்கு அமைதியான சூழ் நிலை உள்ளதாக கூறும் அரசாங்கம் ஏன் இன்னும் இராணுவ மயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இவரின் கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

யப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவங்களை வாபஸ் பெற வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர்கள் இராணுவத்தை மீளப் பெறவில்லை என்று அமெரிக்காவை ஹெகலிய உதாரணம் காட்டியுள்ளார். அப்படி என்றால் அவரிடம் நாங்கள் ஒன்றை சொல்கின்றோம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் பல்லின மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வைப் கொடுக்க சுவிஸ், கனடா போன்ற நாடுகளில் உள்ள அரசியல் முறையை பின்பற்ற அமைச்சர் ரம்புக்வெல இந்த நாடுகளை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக