22 ஜூலை, 2010

156 ஆண்டு பழைமை: சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்

மறுசீரமைப்புகுழு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

வெள்ளவாயவில் 40 ஏக்கரில் நவீன சிறை

இடநெருக்கடியை தவிர்க்க அவசர நடவடிக்கை

(கே. அசோக்குமார்)

11,000 சிறைக்கைதிகளை தடுத்து வைக்கும் வசதி கொண்ட சிறைச்சாலைகளில் இன்று 26,000க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார்.

தலைநகரையும் பிரதான நகரங்களையும் அண்டியுள்ள பிரதான சிறைச்சாலைகள் அனைத்தையும் சகல வசதிகளுடன் கூடிய நவீன சிறைச்சாலையாக வெள்ளவாய பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நிதியமைச்சின் அனுமதியை கோரியுள்ளதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடிகளைப் போக்க வேண்டும் என்ற மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் பரிந்துரைக்கு அமையவே அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளவென புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பீ. டபிள்யூ. கொடிப்பிலி தலைமையில் நியமிக்கப்பட்ட 12 பேர் கொண்ட மறுசீரமைப்பு பரிந்துரைக்குழு நேற்றுக்காலை தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்ததாக அமைச்சர் டியூ தெரிவித்தார்.

சுமார் 156 வருடங்கள் பழைமை வாய்ந்த சிறைச்சாலைகளை மறுசீரமைப் பதற்காக மாறி மாறி வந்த அரசுகள் அனைத்தும் குழுக்கள் நியமித்துள்ளன. நான்கு பிரதான குழுக்கள் உட்பட அதிகாரிகள் மட்டத்திலான சிறு சிறு குழுக்களும் நியமிக்கப்பட்டன.

இவை போன்று மேலும் ஒரு குழுவை நியமித்து காலத்தை இழுத்தடிக்க நான் விரும்பவில்லை. முதலாவதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று வருடங்கள் ஆகின. அவ்வாறில்லாமல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவரச, குறுகிய மற்றும் மத்திம கால வேலைத் திட்டங்களை உடனடியாக நடைமுறைப் படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது. குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் மிகப்பிரதானமாகக் கருதப்படுவது சிறைச்சாலைகளின் இடநெருக்கடிகளைப் போக்குவதும் சிறைக்குள் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதுமாகும்.

சிறைச்சாலைகளின் அவசிய தேவையாகவுள்ள மலசல கூட வசதிகளை உடனடியாக செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டியூ. தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக