22 ஜூலை, 2010

இந்திய அரசால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்:ததேகூ

undefined
இலங்கை இனப் பிரச்சினை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித்தர முடியும் என சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து இந்திய ஊடனம் (தினமணி) ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல் இராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அடியோடு இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உத வி யும் செய்யவில்லை.

இந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத்தேவையான 10 தகரம், 3 மூட்டை சிமெண்ட் மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும் அவலநிலை வடக்குப் பகுதியில் உள்ளது.

தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர் களின் சொந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 இலட்சம் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 4 இலட்சம் சிங்களவர்களை வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலமும் நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பது தான் இப்போது அவசரத் தேவையாக உள்ளது. எனவே, போரின் போது இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ் மக்களின் வீடு, விவ சாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது மிக அவசியமாக உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம்.

அவர்கள் அனைவருமே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்ற கேள்வியையே கேட்கின்றனர்.

இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது. எனவே, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் சுதந்தி ரமாக வசிக்கவும், தமிழ் மக்கள் விரும்பக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவும் இந்திய அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். இலங்கை இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித்தர முடியும்.

இதைத்தான் எங்கள் பயணத்தின் போது இந்தியத் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். இலங்கை தமிழ் மக்களை இந்திய அரசு கைவிடாது என்றும், மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதைத்தான் நாங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் வலியுறுத்தினோம். மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரும் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்துக்கு முக்கிய பங்கு:

எனினும், தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் என தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் மாறுபாடுகளை ஒதுக்கி விட்டு, ஒற்றுமையாக, ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் தீர்வுக் கான நடவடிக்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்தும்.

ஆறு கோடி தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால், மத்திய அரசு அதைப் புறக்கணித்து விடாது.இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ள நாங்கள், விரைவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக