30 ஜூன், 2010

கொழும்பு நகரம் விஸ்தரிப்பு; புதிய நகரமைக்கவும் திட்டம்


கொழும்பு நகரை விரிவாக்கும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்தப்படவுள்ளது.

நிதி, திட்டமிடல் பதில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார். வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“நகரங்கள் மற்றும் நகரமயமாக்கல் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தியதாக எமது நகர அபிவிருத்தி உபாயம் காணப்படும். கொழும்பு நகரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மேல் மாகாணத்தில் மிகச் சிறந்த நகர அபிவிருத்தியினைப் பிரதிபலிக்கும் வகையில் கொழும்பு நகரம் விரிவாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கெரவலப்பிட்டிய, கடவத்தை, கடுவலை மற்றும் கொட்டாவை போன்ற புதிய நகர மயமாக்கப்பட்ட இடங்களை இணைக்கும் வெளிச்சுற்று வட்டப் பாதையை உள்ளடக்கியதாக இப்புதிய அபிவிருத்தி காணப்படும். கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் எல்லை வர்த்தக மையங்களின் நுழைவாயிலாகக் காணப்படும். 450 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய நகரமொன்றினை உருவாக்குவதற்கு கொழும்பு தெற்கு துறைமுகத்தினை அண்டிய பகுதி வரைக்கும் கொழும்பு நகரம் விரிவாக்கப்படும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக