30 ஜூன், 2010

வடக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க 2 பில்லியன் டொலர் மூன்று வருடங்களில் முழுமையாக பூர்த்தி

வட பகுதியில் போருக்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவென சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா (2 பில்லியன் அமெ. டொலர்) செலவிடப்படு வதாக பதில் நிதி, திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், சுவிற்சர்லாந்து, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியுள்ள இந்த நிதியைக் கொண்டு அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்று அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தை நேற்று (29) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் கலாநிதி அமுனுகம, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்திய அனுபவங்களைக் கொண்டு ஏனைய மாகாணங்களில் பின்தங்கிய 10 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த ஓகஸ்ட் மாதம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சிறந்த வாழ்க்கை முறையினை உருவாக்குவதற்கு நடுத்தரத்திலிருந்து நீண்ட காலம் வரையான அனைத்துமுள்ள டங்கிய மீள் கட்டமைப்பு உபாயமொன் றினை பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தலைமன்னாரிலி ருந்து மதவாச்சியையும், ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறையினையும் இணைக்கும் வடக்கின் புகையிரதப் பாதைகளை அமைத்தல், அதேபோன்று ஏ-9 மற்றும் ஏ-32 போன்ற தேசிய பெருந்தெருக்கள் நிர்மாணமும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல், பாதைகள் , பாடசாலைகள், வைத்தியசாலைகள், நீதிமன்றங்கள், குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத் துவதற்கான நிதியேற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்பு மற்றும் மீள் கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகள் அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், சுவிற்சர்லாந்து, ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதி ஏறக்குறைய 2 பில்லியன் ஐ. அ. டொலர்களாகும். இப்பிரதேசங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றுவதற்கு இது அரசாங்கத்தினை இயலச் செய்யும். எமது ஜனாதிபதி அடிக்கடி குறிப்பிடுவது போல; அபிவிருத்தியற்ற சமாதானமும் சமாதானமற்ற அபிவிருத்தியும் அர்த்தமுள்ளதாக இருக்கமாட்டாது. தற்பொழுது பிணக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அப் பிரதேசங்களின் துரித அபிவிருத்திக்கு அரசாங்கம் தனது முழுமையான கவனத்தினைச் செலுத்தியுள்ளது.

இந்த அபிவிருத்தி முன்னெடுப்புகளை விரைவாக நிறைவு செய்தல், வடக்கு, தெற்கு இணைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை அடைந்துகொள்வதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் முதலீட்டு வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட துறைகளை விருத்தி செய்வதற்கு வடக்கில் உறுதியான பொருளாதார அடிப்படையொன்றினை கட்டியெழுப்ப முடியும்.

ஜனாதிபதி “மஹிந்த சிந்தனை” எதிர்கால தூர நோக்கு” இதீனைச் சமர்ப்பிக்கையில் துரித மாகாண அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கும் உத்தரவாதம் வழங்கினார். அத்தகைய முன்னெடுப்புகள் நிரல் அமைச்சுக்களினாலும் அதேபோன்று மாகாண சபைகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் செயற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் “ரஜரட்ட நவோதய”, “வயம்ப புபுதுவ”, “புபுதமு வெல்லஸ்ஸ”, “கந்துறட்ட உதானய”, “சப்ரகமுவ அறுணாலோகய” மற்றும் “ரன் அறுண” என்பவற்றினை செயற்படுத்துவதற்கு மூன்று வருட உபாய மொன்று செயற்படுத்தப்படும். பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தியில் “வடக்கின் வசந்தம்” மற்றும் “கிழக்கின் உதயம்” செயற் திட்டங்களைச் செயற்படுத்தியதிலிருந்து பெறப்பட்ட பிரத்தியேகமான அனுபவங்கள் இந்த முன்னெடுப்புக்களை செயற்படுத்துவதிலும் பயன்படுத்தப்படும்.

இந்த பிராந்திய அபிவிருத்தி முன்னெடுப்புகளில் ஆரம்ப நடவடிக்கையாக, நாடு முழுவதிலும் பரந்து வாழும் 10,000 வசதி குறைந்த கிராம மக்களுக்கு குடிநீர், பாதை வசதி, மின்சாரம் மற்றும் தரமான வீடு போன்ற வசதிகளை செய்து கொடுப்பதற்கு இலக்கிடப்பட்டுள்ளது. 2010 வரவு செலவுத்திட்டம் மூலதன ஏற்பாடுகளை செய்துள்ளபோதிலும் ஜனாதிபதி பிராந்திய தலைவர்கள், அலுவலர்கள் மற்றும் பிற அக்கறை செலுத்துனர்கள் ஆலோசனை வழங்கல் செயன்முறையில் ஈடுபடுவதற்கு முன்மொழிந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக