8 ஜூன், 2010

புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்களுடனான தென்றல் வானொலியின் நேர்காணல் விபரம்-





புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றல் வானொலியின் ஏழாவது நாள் என்னும் சமகால அரசியல் களம் நிகழ்வில் 06.06.2010 ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றிருந்தார். இதன்போது ஊடகவியலாளரின் கேள்விகளுக்கும் நேயர்களின் கேள்விகளுக்கும் புளொட் தலைவர் பதிலளித்தார்.

 

ஊடகவியலாளர்: வணக்கம் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களே!

 

சித்தார்த்தன் : வணக்கம்

 

ஊடகவியலாளர்: நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிட்டபோதிலும் உங்கள் கட்சி சார்பில் யாரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. ஆனால் இதற்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட கணிசமானவர்கள் இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். இதனடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு கட்சியாக இருப்பதாக சொல்லிக் கொள்ளப்படுகிறது. இதுபற்றி உங்களுடைய கருத்தென்ன?

 

பதில்: எங்களுடைய கட்சியைப் பொறுத்தமட்டில் நடந்து முடிந்த தேர்தலில் ஒரு பாராளுமன்ற அங்கத்தவர்கூட கிடைக்கவில்லை. நாங்கள் நம்பியிருந்தோம் வன்னியில் நிச்சயமாக ஆகக்குறைந்தது ஒரு ஆசனம் கிடைக்குமென்று. ஆரம்பத்திலே ஒரு அங்கத்துவம் எமக்கு கிடைக்குமென்ற நிலையைத்தான் என்னால் பார்க்கக் கூடியதாகவிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு மாற்றத்தையும் பார்க்கக் கூடியதாகவிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களுடைய பலம்பொருந்திய ஒரு கட்சியாக 14அங்கத்தவர்களைப் பெற்று வென்றிருக்கின்றது. தமிழ்க் கட்சி என்ற ரீதியிலே மற்றைய ஒரு தமிழ்க் கட்சியும் ஒரு அங்கத்துவமும் எடுக்காதநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில் நீங்கள் ஒரு விடயத்தைப் பார்ப்பீர்களென்றால், வன்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமிடையில் 4000 வாக்குகள்தான் வித்தியாசமிருந்திருக்கிறது. அது மாத்திரமல்ல மொத்த 90வீதமான தமிழ்மக்கள் வாழும் வடக்கை எடுத்துப் பார்த்தீர்களென்றாலும் கூட, 15ஆசனங்களில் 08ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஏனைய ஆசனங்கள் தேசியக் கட்சிகள் அல்லது சிங்களக் கட்சிகள் என்று கூறக்கூடிய கட்சிகளுக்கும் கிடைத்திருக்கிறது. ஆகவே அதில் மிகப்பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை. இதில் ஐக்கிய தேசியக் கட்சி 02 அங்கத்தவர்கள் எடுத்திருக்கிறார்கள். அரச கட்சி 05ஆசனங்கள் எடுத்திருக்கிறார்கள். மக்கள் அரச கட்சிக்கு 05 ஆசனங்களை வழங்கியிருக்கிறார்கள். அதேபோல் கிழக்க மாகாணத்தை எடுத்துக்கொண்டால் 16ஆசனங்கள், அதில் 05ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கின்றது. எனவே இன்றைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களுடைய ஒரே கட்சியாக திகழ்கிறது என்பது யதார்த்தம். இந்த ரீதியில்தான் இன்று செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி அவர்கள்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றார். நாளை பேசுவதாக அறியமுடிகிறது. ஆகவே அவர்களுக்கு மிகப்பெரிய கடமையொன்று இருக்கின்றது. தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அவர்கள்தான் முற்றுமுழுதான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற ஒரு கடப்பாடு நிச்சயமாக அவர்களுக்கு இருக்கின்றது. அதை சரியாக அவர்கள் செய்வார்கள் என நான் நம்புகிறேன்.

 

ஊடகவியலாளர்: நீங்கள் கூறுகின்றபோது வடக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 08உம், சிங்களப் பெரும்பான்மைக் கட்சிக்கு 07ஆசனங்களும் கிடைத்திருக்கிறது. இவ்விடயத்தைப் பார்க்கும்போது வெளிநாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களால் பேசப்படுகின்ற யுத்தக்குற்றம் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கூட அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றபோது இங்குவாழும் மக்கள் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவுமில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் தெரியவில்லை. ஏனென்றால் இந்நாட்டின் தேசியக் கட்சிக்கு அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட ஏனையவர்கள் பேசுவதுபோல் இவை சரியென்று இருந்தால் இந்த மக்கள் அரசை நிராகரித்திருக்க வேண்டும். இதைப்பற்றி நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

 

பதில்: நீங்கள் கூறியபோதுதான் அதுபற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தேன். நீங்கள் கூறுவதில் மிகப்பெரிய உண்மை இருக்கிறது. வன்னியின் இறுதிக்கட்ட யுத்தகாலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கைகால்களை இழந்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுபற்றிய ஒரு மிகப்பெரிய பிரசாரம் உலகம் முழுக்க எடுக்கப்பட்டது. ஆகவே தமிழ்மக்கள் மத்தியில் அரசகட்சிக்கு நிச்சயமாக கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்றுதான் நாங்கள் பார்த்தோம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அப்படியான ஒரு எதிர்ப்பை நிச்சயமாகக் காட்டவில்லை. அங்கு பாரியளவில் இராணுவத்தினால் மிகப்பெரிய யுத்தக்குற்றங்கள் நடந்ததாகவோ, அல்லது அந்தமக்கள் அதனைப் பார்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். வடக்கில் தான் கடைசி யுத்தத்தில் மிகப்பெரியளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பாதிக்கப்பட்ட மக்கள் அரசகட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள். அல்லது பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் வெளிநாடுகளில் இந்த யுத்தக்குற்றங்கள் பற்றி பேசுவது எந்தளவிற்கு எடுபடப்போகிறது என்று புரியவில்லை. யுத்த குற்றங்களைப் பற்றி பெரியளவில் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை போல்தான் தெரிகிறது.

 

ஊடகவியலாளர்: 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது உங்கள் கட்சியில் யாரும் தெரிவுசெய்யப்படவில்லை. இம்முறை தேர்தலிலும் எவரும் தெரிவாகவில்லை. அந்நேரம் தெரிவாகவில்லை என்பதற்கு உங்களால் சொல்லப்பட்ட ஒரு காரணம் புலிகளின் பின்னணியில்தான் அந்தத் தேர்தல் நடந்தது என்று. அந்தத் தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்குமிடையிலான நிலையை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

 

பதில்: நிச்சயமாக 2004ம் ஆண்டுத் தேர்தல் புலிகளுடைய பின்னணியிலே நடைபெற்ற ஒரு தேர்தல். அதிலே மக்கள் ஓர் அமைதிவரும். தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்திருந்தார்கள் என்றுதான் நாங்கள் நம்பினோம். அது மாத்திரமல்ல பல முறைகேடுகளும் அந்த தேர்தலில் நடைபெற்றிருந்தது. அதை நாங்கள் நேரடியாகவே கண்டிருக்கிறோம். நாங்கள் மாத்திரமல்ல இங்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள்கூட கூறியிருக்கின்றார்கள். எனினும் இம்முறை தேர்தலில் அப்படியான முறைகேடுகள் நடைபெற்றிருக்கவில்லை. மக்கள் விரும்பியே வாக்களித்துள்ளனர். எங்களுடைய அறிவுக்கெட்டிய அளவிற்கு மிக மோசமான அளவில் எந்தவித முறைகேடுகளும் பெரியளவில் நடந்திருக்கவில்லை. ஆகவே இம்முறை எங்களுடைய தோல்விக்கு தமிழ் மக்கள் எடுத்த இரண்டு நிலைப்பாடுகள்தான் காரணமாக இருந்திருக்கிறது. ஒன்றில் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிக்க வேண்டும். அல்லது தேசியக் கட்சியொன்றுக்கு வாக்களிக்க வேண்டுமென்று யோசித்திருக்கிறார்கள் போல் தெரிகின்றது. அரச கட்சியைப் பொறுத்தமட்டில் மிகப் பெரியளவில் மக்களுக்கு நேரடியாக தேர்தலுக்கான உதவிகளை செய்திருக்கிறது. இப்படியான காரணங்களுக்காக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதற்கிடையிலே நாங்கள் கூறியதுபோல், நாங்களும் தமிழ்த் தேசியவாதிகள் தான், இருந்தாலும் யதார்த்தத்தை உணர்ந்து இடம்பெயர்ந்த மக்களை சரியான முறையிலே வாழவைக்க வேண்டும். பிடிபட்டிருக்கின்ற இளைஞர்களை வெளியில் கொண்டுவர வேண்டும். இப்டியான கோரிக்கைகளை முன்வைத்துதான் நாம் தேர்தலில் போட்டியிட்டோம். இவை எல்லாவற்றையும் விடுத்து மக்கள் இரண்டுநிலை அதாவது எல்லையில் போய் நின்றுதான் வாக்களித்திருக்கிறார்கள். ஆகவேதான் எங்களுக்கு இந்தமுறையும் ஒரு தோல்வி கிடைத்திருக்கிறது என்று நான் நம்புகின்றேன்.

 

ஊடகவியலாளர்: நீங்கள் வன்னிக் கள நிலைவரத்தைப் பார்த்தளவில் ஒரு ஆசனம் கிடைக்குமென்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்ததாக ஆரம்பத்தில் கூறியிருந்தீர்கள். அந்த நம்பிக்கை இல்லாமற் போனது எப்படி?

 

பதில்: மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் நாங்கள் பேசுகின்றபோது அல்லது எங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லுகின்றபோது. மற்றும் வேட்புமனு தாக்கல் செய்யுமுன்னமே நான் பலநூற்றுக் கணக்கானவர்களுடன் கதைத்திருக்கிறேன். அவர்கள் மிகத் தெளிவாக கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அனுப்பியதால் எந்தவித பிரயோசனமும் இருக்கவில்லை. அந்தப் பகுதிகளில் எந்தவித அபிவிருத்தி வேலைகளும் செய்யப்படவில்லை. நீங்கள் இருந்த காலங்களில் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே உங்களுக்கு இம்முறை வாக்களிப்போம் என்று என்னை சந்தித்தபோது பலர் கூறினார்கள். நீங்கள் கட்டாயமாக இம்முறை பாராளுமன்றுக்கு செல்வீர்கள் என்று கூறினார்கள். இந்நிலையில் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகளையே என்னால் பார்க்கக் கூடியதாகவிருந்தது. இறுதிநேரத்தில் தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்துமே மிகப் பெரியளவிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சார்பான பிரச்சார நடவடிக்கையினை மிகவும் அழகாக மேற்கொண்டிருந்தன. இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் குறித்த பத்திரிகைகள் பெரும்பங்கினை ஆற்றியுள்ளன. மக்களும் தாங்கள் காலையில் சென்று வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டால் தாம் தமிழ்த் தேசியத்திற்கு மிகப்பெரிய பங்கினை ஆற்றிவிட்டோம் என்ற திருப்தியுடன் இருக்கலாமென்று நம்பி அவர்களும் இதனைச் செய்துள்ளனர்.

 

நேயர் : வன்னியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அங்கு பெரும்பான்மை மக்களை குடியேற்றுவதாக கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையினை தோற்றுவித்துள்ளது. பத்திரிகைகளிலும் இதுபற்றி சொல்லப்படுகின்றது. இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

 

பதில்: மீள்குடியேற்றம் என்ற பெயரில் நிச்சயமாக வன்னியில் பெரும்பான்மை குடியேற்றப்படுவார்கள் என்பதை தேர்தல் காலத்திலேயே நாம் கூறியிருந்தோம். இவ்வாறான ஒரு விடயம் நடக்கப்போகின்றது. இவ்வாறான அபாயமொன்று இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனாலும் மடுறோட் மற்றும் கொக்காவில் ஆகிய இரண்டு இடங்களிலும் 1983க்கு முன்பு சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த மக்களைத்தான் குடியேற்றுவதாக அரசு கூறியிருக்கின்றது. 1983ல் வாழ்ந்தவர்கள் என்றால் முப்பது வருடங்கள் ஆகின்றது. அவர்கள் இங்கு வருவதற்கு விரும்புகிறார்களா. அவர்கள் இங்கு வருவதற்கான தேவையிருக்கின்றதா என்பது தெரியவில்லை. இருப்பினும் அரசு அந்தக் குடும்பங்கள் பெருகிவிட்டதாக காட்டிக்கொண்டு அவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். இந்த இடங்களில் மாத்திரமல்ல முல்லைத்தீவின் வெலிஓயா பெருத்துக்கொண்டு வருமென்பதும் நாங்கள் பயப்படுகின்ற ஒரு விடயமே. மற்றும் அங்கு பல கொந்துராத்து வேலைகள் மற்றும் கூலிவேலைகளுக்கு கூட ஆட்களை தெற்கிலேயிருந்து கொண்டுபோவதைப் பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது. இவைகள் சம்பந்தமாக எங்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லாமையால் அதாவது இன்று அதனை எடுத்துக் கூறக்கூடிய ஒரு அங்கத்துவம் இல்லாவிட்டாலும் கூட மிகக் குறைவாக கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களிலும் நாங்கள் பலமுறை தெளிவாக அதனை அரசுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றோம். ஆனால் அரசியல் அதிகாரமில்லாதபடியால் அதனை பெரியளவில் எடுத்துச் செல்வது மிகவும் கஸ்டமாகவுள்ளது. இந்தவேலையை கட்டாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பார்க்கவேண்டுமென்று நம்புகிறோம். பார்க்குமென்றும் நம்புகிறோம்.

 

இப்போது நாங்கள் கொழும்பில் ஒரு வீடு வாங்கி இருக்கலாம் என்றால் பெரும்பான்மையினத்தவர் ஒருவர் அங்குவந்து இருப்பதை தவறென்று எவருமே கூறமுடியாது. அரசாங்கம் திட்டமிட்டு அங்கிருக்கின்ற குடிப்பரம்பலை குறைப்பதற்காக குடியேற்றம் செய்வதைத்தான் நாங்கள் அன்றுதொட்டு இன்றுவரை எதிர்த்து வருகின்றோம். அது நாங்களாக இருந்தாலென்ன? தமிழரசு கட்சியாக இருந்தாலென்ன. தமிழரசுக் கட்சியில் நான் இருந்த காலத்தில் தொடக்கம் பார்க்கின்றபோது அதைத்தான் அவர்களும் எதிர்த்தார்கள். நாங்களும் எதிர்க்கின்றோம் என்பதைத் தவிர, ஒரு தனிமனிதன் வந்து அங்கு காணி வாங்கி இருப்பதை எவருமே பிழையென்று நிச்சயமாக கூறமுடியாது. ஆனால் ஒருவிடயம் என்னவென்றால் 1983கலவர காலங்களில் அந்தக் காணிகளை விற்றுவிட்டு வந்தவர்கள் மீண்டும் சென்று நாங்கள் காணிகளை விற்கவில்லை என்றுகூறி அந்தக் காணிகளுக்கு மீண்டும் உரிமைகோருகின்ற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கின்றது. அது சட்டரீதியாக சரியாக இருக்கலாம். ஆனால் மனச்சாட்சியின்படி பிழையான விடயங்கள் சிலதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் 83க்கு பிறகு அங்கு பதிவுகள் இல்லை. பதிவுகள் உரிய முறையில் நடைபெறவில்லை என்பதே.

 

ஊடகவியலாளர்: இம்முறை தேர்தலில் உங்கள் கட்சியில் இருந்து எவரும் தெரிவுசெய்யப்படாத நிலைக்கு காரணமாக கடந்தகாலங்களில் உங்கள் புலி எதிர்ப்பு கோட்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்தது, அரசுடன் இணைந்து செயற்பட்டது என்பதில் எதுவாவது காரணமாக இருக்கலாமென்று நீங்கள் நினைத்ததுண்டா?

 

பதில்: இதை அப்படிப் பார்க்க முடியாது ஏனென்றால், டக்ளஸ் தேவானந்தா 03 அங்கத்துவம் எடுத்திருக்கின்றார். வன்னியில்கூட பெரும்பாலான தமிழ்மக்கள் கூட, ஏறக்குறைய 20ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் அரசகட்சிக்கே நேரடியாக வாக்களித்திருக்கிறார்கள். அரச கட்சியில் நிச்சயமாக நாங்கள் என்றும் இணைந்திருந்ததில்லை. நல்ல விடயங்களை செய்கின்றபோது ஆதரித்திருக்கின்றோம். பிழையென்றால் பிழையென்று சொல்லியிருந்திருக்கிறோம். ஆகவே நாம் அரச கட்சியில் இருந்ததில்லை. அரச கட்சிக்கே வாக்களித்த மக்களுக்கு எங்களுக்கு வாக்களிப்பதற்கு ஒரு சிரமமாக இருந்திருக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் அங்கு இருக்கின்றபோது தொடர்ந்து மக்களுக்காக எவ்வளவோ சேவைகளை செய்திருக்கிறோம். அதற்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக மாறி வாக்களித்திருக்கிறார்கள். மற்றது நாங்கள் புலிகளை எதிர்க்கின்றோம் என்றால் இப்படியான அழிவை நோக்கி அவர்கள் கொண்டு செல்கின்றார்கள் என்பதைத்தான் நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்த்தோமே தவிர புலிகளை எதிர்க்க வேண்டுமென்பதற்காக எதிர்க்கவில்லை. அவர்களின் பிழைகளைப் பிழையென்று கூறினோம். பிழையென்று கூறியபோது அந்த மாற்றுக் கருத்தினை விரும்பாமல் புலிகள் எங்களை நசுக்க ஆரம்பித்தார்கள். அந்தநேரத்தில் நாம் பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அதை மக்கள் பெரிதாக பார்க்கமுடியாது. ஏனென்றால் நாங்கள் சொன்னது இன்று சரியாக வந்திருக்கின்றது. ஒரு மிகப்பெரிய அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தோம். இன்று அது சரியாக வந்திருக்கிறது. அதற்காக நாம் சொன்னது சரியாக வந்திருக்கிறது என்று நான் சந்தோசப்படவில்லை. ஆனால் இதனை அன்றே புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எல்லாருமே உணர்ந்திருந்தால் இந்த அழிவிலிருந்து மக்களைப் பாதுகாத்திருக்க முடியுமென்றுதான் நான் இப்போதும் கருதுகிறேன்.

 

ஊடகவியலாளர்: கடந்தவருடம் வவுனியா நகரசபைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் உங்களுடைய கட்சி போட்டியிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தது. அதாவது 140வாக்குகளால் அந்த நகரசபையைக் கைப்பற்ற முடியாமற் போயிருந்தது. அந்த விடயத்தை ஒப்பிடுகின்றபோது இந்த நடந்து முடிந்த தேர்தலில் உங்களுடைய கட்சிக்கு முன்னேற்றம் இருக்கிறதா? இது விடயமாக திருப்தியடைகிறீர்களா?

 

பதில்: இல்லை, நிச்சயமாக திருப்பதியடைய முடியாது. ஏனென்றால் நகரத்தில் மாத்திரம் ஒரு சிறிய இடத்தில் 140வாக்குகள் மாத்திரம் குறைவாக எடுத்ததால் நகரசபையை கைப்பற்ற முடியாதுபோனது. நாங்கள் பொதுவாக கிராமங்களிலேதான் எங்களுடைய வாக்கு வங்கி தங்கியிருந்தது. அம்மக்கள்கூட இம்முறை நிச்சயமாக மாறியே வாக்களித்துள்ளார்கள். அதாவது வழக்கமாக எங்களுக்கு மிகவும் ஆதரவாகவிருந்த அந்த கிராம மக்கள் மாறி வாக்களித்துள்ளார்கள். ஏனெனில் கிராமங்களிலேதான் எங்களது கூடுதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆகவே இவ்விடயத்தில் நாம் திருப்திப்பட முடியாது. அங்கத்துவம் கிடைப்பது கிடைக்காதது வேறு, ஆனால் திருப்திப்படக் கூடியளவுக்கு எங்களுக்கு நிச்சயமாக வாக்குகள் கிடைக்கவில்லை.

 

நேயர் : கடந்த 2004 தேர்தலில் வன்னியில் பெரும்பாலான மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருந்தனர். எனினும் அந்தக் காலகட்டத்தில் வவுனியாவில் எந்தவித அபிவிருத்திப் பணிகளும் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் இதற்கு முந்தைய காலகட்டத்தில் புளொட் அமைப்பு உள்ளிட்ட மற்றைய கட்சிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தபோது இங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே இந்தமக்கள் தங்களுக்கு அபிவிருத்தி வேண்டாமென்று நினைக்கிறார்களா அல்லது தாங்கள் ஒற்றுமை மற்றும் தேசியம் என்பதற்குள் தங்களின் நிலையை வெளிப்படுத்த நினைக்கிறார்களா, இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் விரும்பும் அரசியலை தாங்கள் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?

 

பதில்: நான் நம்புகின்றேன் ஒரு அரசியல் கட்சி என்று சொன்னால், அரசியல் கட்சிதான் மக்களுக்கு வழிகாட்ட வேண்டுமேயொழிய, மக்கள் விரும்புவதையெல்லாம் ஒருகட்சி ஏற்றுக்கொண்டு போவதென்றால் அந்தக் கட்சியே இருக்கத் தேவையில்லை. 2004ம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தமட்டில் தேர்தல் இடம்பெற்ற விதம், இடம்பெற்ற முறைகேடுகள், வன்னியிலிருந்து வாக்குகள் போடப்பட்ட விதம், அதாவது ஒருவர் முப்பது முப்பத்திரண்டு வாக்குகள்கூட அளித்திருக்கிறார்கள். 2004ம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தமட்டில் அந்நேரம் கடும் யுத்தம் இடம்பெற்றுவந்தமையால் ஒரு அமைதிவரும் என்ற நம்பிக்கையிலும் மக்கள் வாக்களித்தார்கள். இம்முறை தேர்தலின்போது கடந்த ஆறு வருடங்களாக இப்பகுதியில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை, அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று பலரும் என்னிடம் கூறினார்கள். கிராம முன்னேற்றச்சங்கத் தலைவர்கள், சமூகப் பெரியார்கள், பொதுமக்கள் இப்படி பலருடன் நான் கதைத்தபோது நேரடியாகவே கூறினார்கள், நீங்கள் இருக்கின்றபோது மிகப்பெரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகள் முன்னேறவேண்டும். ஆகவே நீங்கள் நிச்சயம் பாராளுமன்றம் போகவேண்டும். போவீர்கள் என்று சொன்னார்கள்.

 

ஒருவர் தனது வாக்கை கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டுவிட்டால் தனது கடமை தமிழ்த் தேசியத்திற்கு முடிந்துவிட்டது. பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியோ பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்கள். அதாவது வெளிநாடுகளிலுள்ளவர்கள் 100டொலரை புலிகளுக்கு கொடுத்துவிட்டால் தங்கள் பணி முடிந்துவிட்டது என்று கருதுவதுபோல வடகிழக்கில் மக்கள் அந்த நம்பிக்கையில் வாக்களித்துள்ளனர். ஆனால் இம்முறை வாக்களிப்பைப் பார்க்கையில் தமிழ் மக்கள் அரசுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வாக்களித்திருக்கிறார்கள். வன்னியைப் பொறுத்தமட்டில் ஆகக்குறைந்தது 15 முதல் 16வீதம் முஸ்லிம்களே அங்குள்ளனர். முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் சேர்த்தால் ஆகக்கூடினது 20வீதம் தான் இருப்பார்கள். ஆகவே முஸ்லிம் ஒரேயொரு அங்கத்தவர் வருவதற்கான வாக்குகளே அங்குள்ளன. இருந்தும் மூவர் வந்திருக்கிறார்கள். அதிலே பிரச்சினையில்லை. அவர்களும் தமிழ்பேசும் மக்கள்தான். ஆனால் அரசகட்சியில் வந்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் தமிழ் கட்சிக்குள்ளால் வந்திருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பேன். தமிழ்மக்கள் அவர்களுக்கு வாக்களித்து ஒற்றுமையை உறுதிப்படுத்து;கிறார்கள் என்ற ரீதியில் நான் சந்தோசப்பட்டிருப்பேன். ஆனால் அவர்கள் அரச கட்சிக்குள்ளாலும், ஐ.தே.கட்சிக்குள்ளாலும் வந்திருக்கிறார்கள். ஆகவே அரச கட்சிக்கும் ஐ.தே.கட்சிக்கும் அந்த மக்கள் வாக்களிக்கின்றபோது அவர்கள் அபிவிருத்தியையோ, அல்லது பிரச்சினைக்கான தீர்வையோ நோக்கி வாக்களிக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. வேறு ஏதோவொரு காரணத்திற்காக அவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள. அது அந்த மக்களின் அரசியல் தெளிவின்மையையோ அல்லது அக்கறையின்மையையோ காட்டுகிறது போலதான் எனக்குத் தெரிகின்றது.

 

நேயர்: தமிழ்த் தேசியத்தை இனிமேல் யார் வழிநடத்தப் போகின்றார்கள்?

 

பதில்: நல்ல கேள்வி, பிரபாகரனுக்கு பின்பு யார் வரப்போகிறார்கள் என்று கேட்கிறீர்கள். தமிழ்த் தேசியம் என்பது நான் நினைக்கின்றேன். தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு பிழையான அடிப்படை எண்ணக்கருவைத்தான் வைத்திருக்கிறார்கள் என்று. ஏனென்றால், தமிழ்த் தேசியமென்றால் முற்றுமுழுதாக தொடர்ந்து போராடியே தமிழினம் அழிந்துவிட வேண்டும் என்பதல்ல. நாங்கள் அனைத்து இயக்கங்களும் ஆயுதம் எடுத்தபோது மிகத் தெளிவாக தமிழ் மக்களை வாழ வைக்க வேண்டும். தமிழ் மக்களை இந்நாட்டில் சரிசமமான பிரஜைகளாக வாழவைக்க வேண்டும். முடியாவிட்டால் எங்களுக்கென்று ஒரு தனிநாட்டை அமைத்துக் கொள்ளவேண்டும். இந்த அடிப்படை நோக்கத்திலேதான் நாங்கள் ஆயுதம் எடுத்தோம். ஆயினும் இந்நாட்டிலே ஒரு தனிநாடு அமைப்பது கஸ்டமென்று கண்டபோது அனைவருமாக ஒரு சரியான தீர்வை நோக்கிப் போயிருக்க வேண்டும். நாம் அரசியல் ரீதியாக, ஆயுத ரீதியாக, பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக எல்லா ரீதியிலும் பலமாக இருந்தபோது ஒரு சரியான அரசியல் தீர்வை நோக்கிப் போயிருக்கவேண்டும். அன்றில் இந்திய அரசாங்கம் எம்மை முற்றுமுழுதாக ஆதரித்தபோதாவது ஒரு சரியான அரசியல் தீர்;வை நோக்கிப் போயிருக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்துமே எங்களது போராட்டத்தை ஒரு விடுதலைப் போராட்டமென்று ஏற்றுக்கொண்டு எங்களை எல்லாம் நேரடியாக அங்கீகரிக்கா விட்டாலும்கூட ஒரு மறைமுகமான அங்கீகாரம தந்து அந்நாடுகளில் செயற்பட அனுமதித்த போதாவது அந்நாடுகளின் உதவியைக் கொண்டாவது ஒரு சரியான தீர்வுக்குப் போயிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியா நிச்சயமாக ஒரு தனிநாட்டை எதிர்க்கின்றது என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். பிரபாகரன் உட்பட ஒவ்வொருவருக்கும் தெரியும் இந்தியா ஒரு தனிநாட்டை இந்தப் பகுதியில் உருவாக விடாதென்று. இலங்கை அரசாங்கம் ஓம் என்றால்கூட இந்தியா இந்தப்பகுதியில் ஒரு தனிநாட்டை உருவாக விடமாட்டாதென்பது எங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆகவே நாங்கள் பலமாக இருந்தபோது ஒரு சரியான தீர்வுக்கு போயிருக்க வேண்டும்.

 

தமிழ் தேசியம் என்ற பதத்தை ஒரு சரியான முறையிலே உணர்ந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய உணர்வு ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கின்றது. தமிழ்த் தேசியம் என்ற பெயரால் எதையும் செய்யலாம் என்ற ஒரு எண்ணப்பாட்டில்தான் நாங்கள் கடந்த காலங்களில் எங்களது போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியிருக்கின்றோம். அது யாராக இருந்தாலும், நிச்சயமாக தமிழ்த் தேசியம் என்ற பதத்தை மிகப் பிழையான முறையில் பாவித்து எமது இனத்தின் அழிவைநோக்கி நாங்கள் அனைவருமே கொண்டு விட்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்திலே பங்குபற்றிய அதாவது, அது சாத்வீக போராட்டமாக இருந்தாலென்ன ஆயுதப் போராட்டமாக இருந்தாலென்ன நாங்கள் ஒவ்வொரு இயங்கங்களுமோ அல்லது ஒரு கட்சிகளுமே மிகத் தெளிவாக எங்களுடய கட்சி அல்லது எங்களுடைய இயக்கத்தினுடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்காகவுமே இந்த தமிழ் தேசியத்தை உபயோகப்படுத்தினோமே தவிர உண்மையிலே சரியான முறையில் அந்த மக்களுக்காக அதைப் பாவிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே இன்று யார் இந்த தமிழ்த் தேசியத்தை எடுத்துச் செல்பவர்கள் என்பதைக் காட்டிலும் இன்று யார் இந்த மக்களை வாழவைக்கப் போகிறார்கள் என்பதே முக்கியம். வன்னியில் இருக்கின்ற மக்களுக்கு இப்போதுகூட மீள்குடியேற்றப் பிரச்சினை இருக்கின்றது. அங்கு சிங்கள மக்களுடைய குடியேற்றம் உருவாக்கப்படலாம் என்ற ஒரு பயத்தில் வாழுகிறார்கள். அந்த மக்களை தங்கள் கிராமங்களில் கொண்டுபோய் விட்டாலும் சரியான முறையில் அவர்கள் இன்னமும் வாழத் துவங்கவில்லை. அவர்களை கொண்டுபோய் விட்டதைச் சரியென்றுதான் நான் இன்னும் கூறுகின்றேன் ஏனென்றால் முகாம்களில் அடைத்து வைத்திருப்பதைவிட அவர்கள் தங்களது கிராமத்தில் கொண்டுபோய் விட்டு அங்கு அவர்கள் ஒரு கொட்டிலில் இருந்தாலும்கூட அவர்கள் சொந்த இடத்தில் இருக்கின்ற மன திருப்தியோடாவது இருக்கிறார்கள். ஏனெனில் நான் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமாக இந்த மீள்குடியேற்றக் கிராமங்களுக்குச் சென்று பார்த்திருக்கின்றேன். மக்களுடன் கதைத்திருக்கின்றேன். அவர்கள் மிகவும் வேதனையில் வாழுகின்றார்கள். கஸ்ரங்களில் வாழுகின்றார்கள். இருந்தாலும் நான் எனது சொந்தக் கிராமத்துக்கு வந்துவிட்டேன். நான் ஏதாவது செய்து பிழைத்துக் கொள்வேன் என்றொரு நம்பிக்கையில் அவர்கள் வாழுகின்றார்கள். அந்த ஏதாவதை செய்வதற்கு நாங்கள் உதவ முடியுமா என்பதுதான் இன்றிருக்கின்ற கேள்வி.

 

தமிழ்த் தேசியம் என்றுகூறி, தமிழ் மக்களைத் தொடர்ந்து அழிப்பதைக் காட்டிலும் அதற்காக நான் தமிழ்த் தேசியம் பிழையென்று நான் கூறவில்லை. அது நான் முன்பு குறிப்பிட்டதுபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையிலே தேசியம் என்பது நிச்சயமாக இருக்கின்றது. அந்த தேசிய உணர்வு இல்லாவிட்டால் அவன் நிச்சயமாக ஒரு மனிதனாக இருக்கமுடியாது. அதிலே ஒரு பிழையுமில்லை. அது நிச்சயமாக இருக்கவேண்டும். நான் நெடுகலுமே கூறுகிறேன் பிரபாகரனைக் காட்டிலும் எனக்கு தமிழ்த் தேசிய உணர்வு கூட இருக்கின்றது என்று. ஏனென்றால் நான் நீண்ட நெடுங்காலமாக 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் தொடக்கம் தமிழ் மக்களுடைய போராட்டங்களில் பங்குபற்றி வந்திருக்கின்றேன். ஆகவே தமிழ்த் தேசியம் என்பதிலே எங்களுக்கு எந்தவிதமான பிரச்சினையுமில்லை. தமிழ்த் தேசியம் என்ற பெயரிலே மக்களை அழிப்பதைக் காட்டிலும் அந்த மக்களை வாழவைப்பதற்கு எங்களால் முடிந்தளவைச் செய்யவேண்டும். இதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்.

 

நேயர் : முப்பது முப்பத்தைந்து வருடங்களாக தமிழ்க் கட்சிகள் அரசை எதிர்த்த கட்சிகளாகத்தான் அரசியல் நடத்தியிருக்கிறார்கள். இதனால் தமிழ்மக்கள் அடைந்த பயன் என்ன?

 

பதில்: தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தமட்டில் அரசை தொடர்ந்து எதிர்த்து வந்தது அந்தக் கட்சிகளின் பிழையல்ல. அரசினுடைய பிழையே. இலங்கையின் முதலாவது சட்டமே இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் என்று மலையகத் தமிழ்மக்கள் 10லட்சம் பேருடைய வாக்குரிமையை இல்லாமற் பண்ணியது. பின்பு 56இலே சிங்களம் மாத்திரம் என்ற சட்டம். பின்பு 70இல் தரப்படுத்தல் இப்படியாக தமிழ்மக்கள் பல வகையிலே நசுக்கப்பட்டு வந்தபோது நிச்சயமாக தமிழ்மக்கள் அரசுக்கு எதிராகப் போராடவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஆகவே அந்த போராட்டம் ஆரம்பித்ததோ, அல்லது அரச எதிர்ப்பாக இருந்ததோ, இருக்கின்றதோ தவறென்று கூறமாட்டேன். என்னைப் பொறுத்தமட்டில் அரசு செய்யக்கூடிய நல்ல விடயங்களை நிச்சயமாக நாங்கள் பாராட்ட வேண்டும், ஆதரிக்க வேண்டும். இன்றிருக்கின்ற நிலைமையிலே முற்றுமுழுதாக அரச எதிர்ப்பு என்ற கோசத்துடன் மாத்திரம் போய்க்கொண்டிருந்தால் வடக்கு கிழக்கில் வாழுகின்ற எங்களுடைய தமிழ்பேசும் மக்கள், தமிழர்களாக இருந்தால் என்ன முஸ்லிம்களாக இருந்தாலென்ன? இன்னும் கஸ்ரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள் என்பதே உங்கள் கேள்வியின் தொனியிலிருந்து நன்றாக விளங்குகின்றது. ஆகவே அதற்காக அரசு செய்வது எல்லாம் சரியென்று சொல்லி எங்களுடைய அடிப்படை உரிமைப் பிரச்சினைகளை விட்டு அரசை ஆதரிக்க முடியாது. அரசு செய்யக்கூடிய நல்ல விசயங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து எங்களுடைய அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நாங்கள் செயற்படுவதன் மூலம் ஓரளவுக்கு எங்களுடைய மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பது மாத்திரமல்ல. அனைத்தையும் இழந்து வடகிழக்கிலே வாழுக்கின்ற இலட்சக்கணக்கான மக்களை வாழவைக்கவும் வேண்டும். அவர்கள் சாதாரண வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமென்பதை மனதிற் கொள்ளுவோமாக இருந்தால் இதற்கான முயற்சிகளை இயலுமானளவு எடுக்க வேண்டும். அதற்கு நாம் விரும்புகிறோமோ இல்லையோ அடுத்த ஏழு வருடத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாக இருக்கப் போகிறார். ஆகவே அவருடன் நிச்சயமாக கதைக்க வேண்டும். இதன் ஆரம்பமாக நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி அவர்களும் பேசவுள்ளனர்.

 

நேயர் : பல தடவைகள் அரசாங்கங்கள் தமிழ்க்கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதை புறக்கணித்தது ஏன்?

 

பதில்: பலதடவை அரசாங்கம் பேச்சுக்கு அழைத்தும் புறக்கணித்தது ஏன் என்கிறீர்கள் நான் நினைக்கிறேன் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தான் கூறுகிறீர்கள் என்று. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்று பாராளுமன்றத்தில் பலம்பொருந்திய கட்சியாக இருந்தது. அவர்கள் அன்று முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள், ஆகவே அவர்களால் தங்கள் விரும்பியதை செய்யமுடியாமல் இருந்திருக்கின்றது. இன்று அவர்கள் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வந்திருக்கின்ற காரணத்தினால்தான் நாளை அவர்கள் அரசுடன் பேசுவதற்கு தயாராக இருக்கின்றார்கள் என நான் நம்புகின்றேன். அதற்கு முன்னைய காலங்களில் அதாவது 2004ற்கு முன்பு எல்லா தமிழ்க் கட்சிகளும் பேச்சுக்களில் பங்குபற்றினார்கள். புலிகளும்கூட திம்புப் பேச்சில் பங்கேற்றிருந்தார்கள். அதற்குப் பிறகுகூட பேச்சுக்களில் பங்குபற்றியிருக்கிறார்கள். ஆகவே தமிழ்க்கட்சிகள் முழுமையாக பேச்சுவார்த்தைகளிலிருந்து விலத்தியிருக்கிறார்கள் என்று கூறுவது அவ்வளவு நியாயமாக தெரியவில்லை. 2004ற்கும் 2010ற்கும் இடைப்பட்ட காலத்திலேதான் தமிழ்க்கட்சிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி இருந்திருக்கிறார்கள். அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் விலத்தியிருந்தது என்பதுதான் உண்மை.

 

நேயர் : தற்போதைய அரசாங்கமோ அல்லது எந்தவொரு பேரினவாத கட்சியோ தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமா?

 

பதில்: நிச்சயமாக தீர்த்து வைக்காது. எந்தவொரு அரசாங்கமும் அது எவராக இருந்தாலும் தமிழ் மக்களின் அல்லது தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒரு தீர்வை முன்வைக்க மாட்டாது. இதிலே என்னைப் பொறுத்தமட்டில் எந்த சந்தேகமும் கிடையாது. 87ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய அழுத்தம் இருந்திருக்கின்றது. ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமாக இருந்தும்கூட எங்களால் பெறக்கூடியது 13வது திருத்தம் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றது. இன்று மகிந்த அரசுமீது அப்படியான ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த ஒரு சர்வதேச நாடுகளோ எவருமே தயாராக இல்லை. இவ்விடயத்தில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். அது மாத்திரமல்ல இன்று நாம் யுத்தத்தில் பாரிய ஒரு அழிவை எதிர்கொண்டு மிகப்பெரியளவில் தமிழ்மக்கள் எல்லாவிதத்திலும் பலவீனமான ஒரு நிலையில் அதாவது இன்று இந்த தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் பற்றி கதைக்கின்றபோது நான் நினைக்கின்றேன் நாங்கள் ஒரு பலவீனமான நிலையில் இருக்கின்றோம் என்று. ஏனெனில் மகிந்த யுத்தத்தில் வென்றவர். பலமாக இருப்பவர். சிங்கள மக்களின் முழுமையான வாக்குகளில் தங்கியிருந்தவர். இன்று ஓரளவில் தமிழ்மக்கள் மகிந்த அரசுக்கு வாக்களித்திருந்தாலும் கூட அவர் முற்றுமுழுதாக சிங்கள பெரும்பான்மை வாக்குகளில் தங்கியிருப்பவர். அவர் ஒரு அரசியல்வாதி. ஆகவே அவர் நிச்சயமாக சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளாத அல்லது முற்றுமுழுதாக சிங்கள மக்கள் புறக்கணிக்கக் கூடிய ஒருதீர்வை முன்வைப்பாரென்று நான் நம்பவில்லை. ஆனாலும் அவர் யுத்தத்தில் வென்றிருக்கிறார். இந்நாட்டில் அமைதிவேண்டும். இந்தநாடு முன்னேறவேண்டும் என்பதை மனதிற்கொண்டு ஆகக் குறைந்தது ஒரு நியாயமான தீர்வு, வடகிழக்கில் எங்களுடைய பகுதிகளில் எங்களுடைய மக்கள் நிம்மதியாக தாங்களே தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக் கூடிய விதத்திலே அதிகாரப்பரவலாக்கல் கொண்ட ஒரு தீர்வை முன்வைக்க வேண்டுமென்பதுதான் எங்களுடைய கோரிக்கை நிச்சயமாக அவரிடம் இருக்கிறது. இன்றல்ல தொடர்ந்து நாம் அவருக்கு இந்த அழுத்தத்தைக் கொண்டு வருகின்றோம். என்ன நடக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

நேயர் : உங்கள் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் எந்தவொரு ஆசனமும் இல்லாத இந்த காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நீங்கள் எந்தவகையில் உதவிசெய்ய நினைத்திருக்கிறீர்கள்?

 

பதில்: ஒன்று அரசியல் அதிகாரம் இல்லாவிட்டால் இன்றிருக்கின்ற நிலையில் சில விடயங்களைச் செய்வது கடினம். ஆனால் நாங்கள் ஏறக்குறைய முப்பத்தைந்து நாற்பது வருடங்களாக இந்த போராட்டத்திற்கு வந்தபோது நாங்கள் அன்று என்றோ ஒருநாள் பாராளுமன்றம் செல்வோம் என்று நிச்சயமாக எதிர்பார்த்து வரவில்லை. அது எங்களுடைய கட்சியில் இருக்கின்ற ஒவ்வொரு தோழர்களையும் பற்றி நான் கூறமுடியும். அவர்கள் எவருமே அவ்வாறு எதிர்பார்த்து வரவில்லை. இருந்தாலும் பாராளுமன்றத்தில் இருப்பது மக்களுடைய சில சேவைகளை, தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஒரு பிரயோசனமான சாதனமாகவே நான் பார்க்கின்றேன். அது கிடைக்கவில்லை என்பதற்காக நாங்கள் ஒதுங்கிவிட முடியாது. பாராளுமன்றத்திற்கு நாங்கள் 94ம் ஆண்டுதான் முதன்முதலாக வந்தோம். அதற்கு முன்பே இருபது முப்பது வருடங்கள் எங்கள் கட்சி இயங்கி வந்திருக்கின்றது. மக்களுக்குப் பலவகைகளிலே நாங்கள் இயன்றளவுக்கு உதவி வந்திருக்கிறோம். சேவைகளைச் செய்து வந்திருக்கின்றோம். பாதுகாப்பளித்து வந்திருக்கின்றோம். வவுனியாவில் மற்றும் வன்னிப் பகுதிகளிலும் கேட்டால் தெரியும், அந்தப் பகுதிகளைப் பாதுகாப்பதில் நாங்கள் பாரியளவில் சேவைகளைச் செய்து வந்திருக்கின்றோம். இந்தக் காலத்திலே அதை செய்வது மிகவும் கடினமான விடயமென்று தெரிந்தாலும் எங்களால் இயன்றளவுக்கு அந்த மக்களுக்கு அதாவது வன்னியில் மாத்திரமல்ல மற்றைய பகுதிகளிலும் இருக்கக்கூடிய மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளைச் செய்வோம். தனிப்பட்ட முறையில்கூட ஜனாதிபதியாக இருந்தாலென்ன, பல அமைச்சர்களும்கூட எங்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள். நன்றாகத் தெரிந்தவர்கள் ஆகவே அவர்களின் ஊடாகவும் தீர்வு விடயமாக இருந்தாலென்ன, மக்களை மீள்குடியேற்றும் விடயமாக இருந்தாலென்ன அவர்களை அணுகக் கூடியதாக இருக்கின்றது. அதை நாம் தொடர்ந்து செய்வோம்.

 

ஊடகவியலாளர்: புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுடைய நாடு கடந்த தமிழீழம் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

 

பதில்: கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலே தமிழ்பேசும் கட்சிகளுக்கான கூட்டம் சூரிச்சில் நடைபெற்றது. அதில் பங்கேற்றிருந்தேன். அதன் பிறகு புளொட் அமைப்பினராகிய நாங்கள் பொதுமக்களுடனான கூட்டத்தினை சூரிச் மாநகரில் நடத்தியிருந்தோம். அதிலே புலிகளை ஆதரிக்கின்றவர்களும், புலிகளின் செயற்பாடுகளில் தீவிரமாக இருந்தவர்களுமாக பலர் வந்து கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கேட்டார்கள். நாடு கடந்த தமிழீழத்திற்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்களா என்று, அதற்கு ஆதரவளிக்க முடியாதென்று சொன்னேன். இதன்போது நான் அவர்களைக் கேட்டேன், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கு உண்மையாக விளங்கவில்லை என்று. ஒன்று நாடொன்று உங்களை அங்கீகரித்து அந்த நாட்டிலே ஒரு காபந்து அரசாங்கமொன்று நீங்கள் வெளியில் வைத்து செயற்படுவதைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களா? அப்படி என்றால் எந்தநாடு அங்கீகரித்திருக்கின்றது தமிழீழம் என்று. அப்படி ஒன்றுமே கிடையாது. ஆகவே என்ன செய்ய யோசித்திருக்கின்றீர்கள் என்று கேட்டேன். இந்தக் கேள்வியைக் கேட்டவருக்கே உண்மையில் அது சரியாக விளங்கியிருக்கவில்லை.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் அவர்கள் புலிகளை முழுமையாக ஆதரித்துக் கொண்டிருந்த காலங்கள் முதல் இன்றுகூட அவர்கள் அதனை முழுமையாக நிராகரிக்கின்றார்கள். முழுமையாக நிராகரிக்காவிட்டாலும் தாங்கள் அதற்கு சம்பந்தமில்லையென்பதை பலதடவைகளில் கூறி விலகி நிற்கிறார்கள். இந்த நாடுகடந்த தமிழீழம் ஒரேயொரு விசயத்தை செய்யலாம். என்னவென்றால் இங்கிருக்கக்கூடிய ஓரளவு அமைதியான சூழலை குழப்பலாம். இது ஒன்றைத்தான் செய்ய முடியுமேயொழிய அதற்குமேல் எதையும் செய்யமுடியாது. மற்றையது இந்த நாடுகடந்த தமிழீழத்திற்காக புலிகள் அங்கு இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கின்றார்கள். அதில் ஒருபகுதியினர் தான் இந்த நாடு கடந்த தமிழீழத்திற்கான தேர்தலை நடத்தியிருக்கிறார்கள். அதிலே மற்றைய பகுதியினர் சில இடங்களில் இத்தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் மிகப்பெரிய குழப்பமொன்றுகூட ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் எந்தவிதமான ஒரு பிரயோசனமும் இங்கு வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை. அங்கிருக்கும் புலி உறுப்பினர்களுக்கு பிரயோகசனம் ஏதும் இருக்குமோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு சிலவேளை அதனால் தனிப்பட்ட லாபங்கள் ஏதும் வரலாம். ஆனால், நிச்சயமாக இங்கிருக்கக் கூடிய தமிழ் மக்களுக்கு இதனால் எந்தவொரு லாபமும் வராது இதனால் பாரிய கஸ்டங்களே வரலாம். ஏனென்றால் அரசு இப்போது அதைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றோம் என்றுகூறி பிரச்சினைகளை உருவாக்கலாம். ஆகவே இதிலே நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்றே கருதுகிறேன்.

 
நன்றி: வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக