8 ஜூன், 2010

தமிழர்கள் குடியமர்த்தும் பணி: ராஜபக்ஷேவுடன் தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் சந்திப்பு





முகாம்களில் அடைபட்டுள்ள இலங்கைத் தமிழர்களை அவர்கள் வசித்த பகுதியிலேயே மறு குடியமர்த்தும் பணியை துரிதபடுத்தக் கோரி, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குழு, டில்லியில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை நாளை சந்திக்க உள்ளது.

மூன்று நாள் பயணமாக இன்று டில்லி வரும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து, போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். அப்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசப்படும். இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகளை வீழ்த்திய பிறகு, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, முதன் முறையாக இந்தியா வருகிறார்.

அவரை, நாளை மாலை சந்திக்கும், தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., - காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை எம்.பி.,க்கள், தமிழர் பிரச்னை குறித்து ஒரு கோரிக்கை மனுவை அளிக்க இருக்கின்றனர். இதற்காக, இக்குழுவின் தலைவரும், தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று டில்லி வந்தார். மற்ற எம்.பி.,க்கள் இன்று டில்லி வர இருக்கின்றனர். ராஜபக்ஷேவிடம் தமிழக எம்.பி.,க்கள் அளிக்க இருக்கும் மனுவில், தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளை, இலங்கை அரசு விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படும் என, விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: கடந்த டிசம்பருக்குள், போரில் பாதிக்கப்பட்ட எல்லா தமிழர்களையும் மறு குடியமர்த்தும் பணி முடிந்து விடும் என இலங்கை அரசு, இந்தியாவிற்கு உறுதியளித்திருந்தது. நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு அதிகளவில் நிதி உதவியையும் தந்திருக்கிறது. இந்த வாக்குறுதியை காப்பாற்ற, இலங்கை அரசு தவறி விட்டது. இன்னும் 80 ஆயிரம் தமிழர்கள், முகாம்களில் அடைபட்டு கிடக்கின்றனர். அவர்களை மறு குடியமர்த்த இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால், மறு குடியமர்த்துவதில், தாமதம் ஏற்படுகிறது என, இலங்கை அரசு சொல்லும் வாதம், ஏற்புடையது அல்ல. மேலும், தமிழர் பிரச்னைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு காணுமாறு இலங்கை அதிபரை தமிழக எம்.பி.,க்கள் வற்புறுத்துவர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள், சில மாதங்களுக்கு முன், இலங்கையில் உள்ள தமிழர்கள் முகாம்களுக்கு சென்று, நிலைமையை நேரிடையாக ஆராந்தனர். பின், அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக