20 மே, 2010

மருந்துத் தட்டுப்பாட்டுக்கு பத்து நாட்களுக்குள் தீர்வு




இந்திய உயர் ஸ்தானிகருடன் பேச்சு; இரு தினங்களில் மேலும் மருந்துகள் இறக்குமதிநாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளுக்கு இன்னும் பத்து நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சு நடத்தியுள்ளதுடன் மேலும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் மேலும் ஒரு தொகை அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி செய்யப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த விசேட அறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

டெங்கு நோயைக் கட்டுப்படுத்து வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. இதன்போது சுகாதாரத்துறையில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.

இந்தியாவிலிருந்து இனிமேல் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத் துடனான நிறுவனங்களிலிருந்து மட்டுமே கொள்வனவு செய்யப்படும்.

மருந்தகக் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தையும் ஒன்றாக இணைத்துள்ளோம். தற்போது நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளை நிவர்த்திக்க கடந்த மூன்று தினங்களுக்கு முன் விமான மூலம் ஒரு தொகை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் மூலமும் மருந்துகள் தருவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தட்டுப்பாடுகள் 90 வீதம் நிவர்த்திக்கப்பட்டு ள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக