20 மே, 2010

தாய்லாந்தில் போராட்டக்காரர்கள் சரண்


தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்து கண்களைக் கட்டி அடைத்து வைத்துள்ளது.​

பாங்காக்,​​ மே 19: தாய்லாந்தின் பாங்காக்கில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் மூலம் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.​ இதையடுத்து அவர்கள் சரணடைந்தனர்.

​ போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இத்தாலி புகைப்பட பத்திரிகையாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.​ மேலும் 3 வெளிநாட்டு பத்திரிகையாளர் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.

​ பாங்காக்கில் அரசுக்கு எதிராக போராடிவருபவர்கள் உடனடியாக நகரைவிட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை மாலை இறுதி எச்சரிக்கை விடுத்தது.

​ இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியில் இருந்து புதன்கிழமை காலை 6 மணி வரை பாங்காக்கில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

​ இந்த எச்சரிக்கையையும் மீறி போராட்டக்காரர்கள் நகரில் வன்முறையில் ஈடுபட்டனர்.​ இதனால் அந்நாட்டு அரசு போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை எடுத்தது.

​ போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த ராணுவத்தினர்,​​ போராட்டக்காரர்களை வன்முறையை கைவிட்டு நகரைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.​ ஆனால் அவர்கள் இதை ஏற்க மறுத்தனர்.​ இதனால் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக விரட்டும் செயலில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

​ இந்நிலையில் ராணுவத்தினருக்கும்,​​ போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.​ இதையடுத்து ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.​ இதில் 3 பேர் பலியாகினர்.​ ஏராளமானோர் காயமடைந்தனர்.

​ ராணுவத்தினர் சுட்டதில் அங்கு நின்றிருந்த இத்தாலி பத்திரிகையாளரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.​ இதனால் அவரது வயிற்றில் ரத்தம் பீறிட்டது.​ அவரை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.​ ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு:​​ ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தியதும் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக போராட்டக்காரர்களின் தலைவர்கள் அறிவித்தனர்.​ இதையடுத்து அவர்கள் அனைவரும் சரணடைந்தனர்.

​ இதனால் கடந்த இரு மாதகாலமாக பாங்காக்கில் நிலவிய அசாதாரண சூழலும்,​​ அரசுக்கான நெருக்கடியும் முடிவுக்கு வந்துள்ளது.

​ தாய்லாந்தில் பிரதமர் அபிசித் வெஜஜிவா அரசை சட்டவிரோதமானது என்றும்,​​ அரசு பதவி விலக வேண்டும் என்றும் கடந்த இரு மாதகாலமாக தட்சிண் சினவத்ரவின் ஆதரவாளர்கள் போராடிவந்தனர்.

​ இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் பாங்காக் நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

​ இந்த போராட்டத்தில் இதுவரை 50-க்கு மேற்பட்டோர் பலியாகினர்.​ 1600-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

​ ​ போராட்டக்காரர்கள் நகரைவிட்டு வெளியேறுமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் அவர்கள் அதை ஏற்கவில்லை.​ நகரைவிட்டு வெளியேற அரசு விதித்த காலக்கெடுவையும் நிராகரித்தனர் போராட்டக்காரர்கள்.

​ இதனால் அந்நாட்டு அரசு ​ போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக