20 மே, 2010

5 இலட்சம் பேர் பாதிப்பு; உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு




மேல் மாகாண ம் உட்ப ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் தொகை சுமார் 5 இலட்சம் என இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1734 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ளத்தினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர இரத்தினபுரி, புத்தளம், கேகாலை, குருநாகல், திருகோணமலை, மாத்தறை, அநுராதபுரம், நுவரெலியா ஆகிய மாவ ட்டங்களும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.

மழை தொடரும்

கடும் காற்றுடன் கூடிய மழையை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் கூறியது. வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள சூறாவளி இலங்கையை தாண்டி நகர்வதால் இலங்கைக்கு சூறாவளி அபாயம் ஏற்படாது என அவதான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இந்தத் தாக்கத்தினால் எதிர்வரும் தினங்களிலும் கடும் காற்று வீசும் எனவும் இதனால், எதிர்வரும் தினங்களிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். மேல், மத்திய, தென்பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில், நேற்று ஓரளவு குறைவாக மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிற போதிலும் ஜின் கங்கை மற்றும் களுகங்கை நீர் மட்டங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் 8 பேர் இறந்துள்ளனர்.

கொழும்பு

வெள்ளத்தினால் கொழும்பு மாவட்டத்தில் 93,168 குடும்பங்களைச் சேர்ந்த 1,42,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2094 பேர் 10 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் வெள்ள நீர் வடிந்து வருவதாகவும் போக்குவரத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இடர்முகாமைத்துவ நிலையம் கூறியது.

கம்பஹா

அதிக மழை காரணமாக 98,168 குடும்பங்களைச் சேர்ந்த 1,42,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நண்பகல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கம்பஹா மாவட்டத்தில் 89,557 குடும்பங்களைச் சேர்ந்த 1,64,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டியவில் மூவரும் கட்டானை பகுதியில் ஒருவரும், கம்பஹா மற்றும் மினுவாங்கொட பகுதிகளில் தலா ஒருவருமாக 7 பேர் இறந்துள்ளனர். இது தவிர 26 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 73 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. 6838 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

கம்பஹா- ஜாஎல வீதியில் பல பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வீதியிலும் நீர் நிறைந்துள்ளதால் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை

களுத்துறை மாவட்டத்தில் 37,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மில்லேனிய பகுதியில் ஒருவர் இறந்துள்ளதாகவும் வெள்ளத்தினால் 88 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

களுகங்கை குடாகங்கை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கீகியன கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் 27 குடும்பங்களும் தொடங்கொட பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 16 குடும்பங்களும் வேறு இடங்களுக்கு அகற்றப்பட்டன.

காலி மாவட்டத்தில் 19,610 குடும்பங் களைச் சேர்ந்த 94,971 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இருவர் இறந்துள்ளனர். வெள்ளம் பார்க்கச் சென்ற ஒருவர் பத்தேகம பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளதோடு மரமொன்று முறிந்து விழுந்ததில் தியாகம பகுதியில் ஒருவர் இறந்துள்ளார். காலி மாவட்டத்தில் 291 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. அம்பலாங்கொட, பலப்பிடிய, பத்தேகம, ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் நீர் வடிந்து வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி மாவட்டமும் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 230 பேரே பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்தத் தொகை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நேற்று முன்தினம் மூவர் கொல்லப்பட்டனர். இது வரை 4 பேர் இரத்தினபுரி மாவட்டத்தில் இறந்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 1310 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் இறந்துமுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 533 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 63 வீடுகள் சேதமடைந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 837 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 82 பேரும் கேகாலை மாவட்டத்தில் மூவரும் குருநாகல் மாவட்டத்தில் 135 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்தில் 2 பேர் இறந்துள்ளதோடு 4 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, 144 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. திருகோணமலையில் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு நுவரெலியாவில் இரு வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்பகமுவ அத்கொட் வாவியின் நீர்மட்டம் உயர்ந்ததால் 25 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

ரயில் சேவை பாதிப்பு

இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பிரதான வீதிகளில் நேற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ராகம, ஹுணுப்பிட்டிய, வல்பொல ரயில் பாதைகளில் நீர் நிறைந்திருந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பாணந்துறை பகுதியில் ரயில் பாதையில் நீர் நிறைந்திருந்ததால் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்திருந்தன. பாரிய மண் திட்டு விழுந்ததால் காலி- மாத்தறை இடையிலான ரயில் சேவை நேற்றும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சில பகுதிகளில் 4-5 அடி உயரத்திற்கு வெள்ளம் காணப்படுவதால் உலர் உணவு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாதுகாப்புப்படையினரும் பொலிஸாரும் சிவில் அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக