23 மே, 2010

இறுதி யுத்தத்தில் தப்பிச்செல்ல முயன்ற பெண்கள் புலிகளால் சித்திரைவதை-ஐ.நா ,




வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களை விடுதலைப் புலிகள் சித்திரைவதைக்கு உள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையிடம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் வழங்கியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தப்பிச்செல்ல முற்பட்ட பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பெண்கள் இணைந்துகொள்வதனை தடுக்கும் முகமாக, பெற்றோர் மிக இள வயதில் அவர்களுக்கு உறவினர்களுடன் திருமணம் செய்துவைத்தாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தினால் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து பகிரங்கமாக விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெண்கள் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும், இதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பில் தெரியவரவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 199 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 146 சிறுவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேவேளை, சிறுவர்களை இணைத்துக்கொள்ளும் பட்டியலிருந்து பிள்ளையான் மற்றும் கருணாவின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதுடன், ஆனாலும் கருணாவின் ஆதரவாளர் இனியபாரதியின் பெயர் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக