இலங்கையில் முப்பது வருட கால உள்நாட்டு யுத்தம் முடிவுற்று இம்மாதத்துடன் ஒருவருட காலம் பூர்த்தியாகின்றது. இருந்த போதிலும் ‘மழை ஓய்ந்தாலும் தூவானம் ஓய்ந்துவிடாதது’ போல வடக்கு- கிழக்கில் அசெளகரியங்களை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் ஆங்காங்கே இட ம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
வடக்கு- கிழக்கில் அமைதியான முறையில் வாழத்தொடங்கியிருக்கும் மக்களிடையே ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், பாலியல் துஷ்பிரயோகங்கள், கொள்ளையிடல் என்பவற்றுடன் கொலைச் சம்பவங்களும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளன.
கடந்த முப்பது வருடத்தில் வடக்கு, கிழக்குப் பிரதேச மக்கள் அனுபவித்த துன்பங்கள், தொல்லைகள் எண்ணிலடங்கா தவை.
ஆயினும் கடந்த மே மாதம் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததை யடுத்து வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வருகின்ற புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகள் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றகரமாக இருந்துவருகின்றன.
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களும் படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய ஒரு முழுமையான அமைதிச் சூழலை நோக்கி நகர்ந்துகொண் டிருக்கின்ற நிலையில் சமூக விரோதக் கும்பல்களின் அடாவடித்தனங்கள் அப்பாவி மக்களை மீளவும் பீதிக்குள்ளாக்குவதாக இருக்கின்றது.
வடக்கு- கிழக்கில் இவ்வாறு அமைதியைக் குழப்பும் சம்பவங்கள் முளைவிட ஆரம்பித்துள்ள அதேசமயம், வெளிநாடுகளில் இருக்கும் குழப்ப வாதிகளும் இலங்கையில் நிலவிவரும் அமைதிச்சூழலை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள பொறுப்பற்ற நபர்களின் நடவடிக்கைகளில் ஒன்றாகவே ‘நாடுகடந்த அரசு’ என்ற கோஷமும் காணப்படுகின்றது. இந்த ‘நாடு கடந்த அரசு’ என்ற வெட்டிப் பேச்சுக்கு உரமூட்டுவதுபோலவே இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
எனவே உள்நாட்டில் ஒரு தீர்க்கமான அரசியல் நடைமுறைகளின்றியும், வெளிநாடுகளில் வெட்டிப்பேச்சுக்களைப் பேசிப் பேசி குழப்பங்களை ஏற்படுத்துவோரின் ‘பகடைக்காய்’களாகியும், சமூக விரோத கும்பல்களின் கெடுபிடிக்குள்ளாகியும் இருக்கின்ற சூழலே வடக்கு- கிழக்கில் நிலவுகின்றது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் சிரார்த்ததினம் நினைவு கூரப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், எஸ். ஜே. வி யின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தி தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக அங்கு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
‘தந்தை செல்வா’ வாழ்ந்த காலத்தில் இலங்கையில் தமிழர் பிரச்சினை பல்வேறு பரிமாணங்களையும் பெற்றிருந்தது.
அவரால் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டங்கள் கடந்த காலங்களில் நிராகரிக்கப்பட்டிருந்தன. ஆயினும் சாத்வீக போக்குடைய காந்தியவாதியாகவே அவர் தம்மை இனங்காட்டியிருந்தார்.
கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்து, குண்டர்களிடம் அடிபட்டபோது கூட அவர் பொறுமைகாத்திருந்தார். எது எப்படியிருந்த போதிலும் தந்தை செல்வாவின் அரசியல் வாரிசுகள் குறிப்பிடுவது போல ‘ஈழத்து காந்தி’ எனக் குறிப்பிடுமளவுக்கு எஸ். ஜே. வி. செல்வநாயகம் எவ்வளவுதூரம் பொருத்தமானவராக இருந்தார் என்பது கேள்விக்குறியாகும்.
அரசியலில் முழுமையான அர்ப்பணிப்புடன் காந்தி இந்தியாவில் செயல்பட்டதைப் போல எஸ். ஜே. வி. செல்வநாயகம் தாமும் இலங்கையில் நடந்து கொண்டார் என்பது கூட கேள்விக்குறியதாகவே இருக்கின்றது.
வடக்கே ஒரு சோஷலிசவாதியாகவும் சிறந்த கல்விமானாகவும் விளங்கிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராகவும் இருந்த அமரர் காத்திகேயன் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தைப் பற்றி ஒரு தடவை இப்படிக்கூறியிருந்தார்.
‘நெல்வநாயகம் என்றால், அவரது செல்வம் எல்லாம் தென்னிலங்கையில், அரசியல் நாயகம் அதாவது தலைமை மாத்திரம் வட இலங்கையில் எனவே, தெற்கே செல்வமும் வடக்கே நாயகமும் சேர்ந்ததுதான் இந்த செல்வநாயகம்’
செல்வநாயகம் மட்டுமல்ல, அவரது காலத்தைச் சேர்ந்த ஜி. ஜி. பொன்னம்பலம் உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள் பலருமே கொழும்பில் தமது சொந்த நலன்களுக்கு முக்கியமளித்த நிலையிலேயே வடக்கே வந்து அரசியல் நடாத்தியிருந்தனர்.
கொழும்பின் உயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியான ஹல்வ்ஸ்டோப்பில் ஒருகாலும், பாராளுமன்றத்தில் ஒரு காலுமாக அவர்கள் இரட்டை வேட அரசியல் நடாத்தியிருந்தனர்.
இந்நிலையில் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மாகாத்தியுடன் எவ்வாறு எஸ். ஜே. வியை ஒப்பிட முடியுமென்பதே கேள்விக்குறியதாகின்றது.
மகாத்மா காந்தி தமது உடல், பொருள், ஆவி அனைத்தையுமே துறந்து அப்பழுக்கற்ற அரசியல் நடாத்தினார். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அவர் இடந்தரவில்லை.
மகாத்மா காந்தி கூட ஒரு பாரிஸ்டராக சட்டத்தொழில் புரிந்தவர். ஆனால் இந்திய சுதந்திரப் போரில் அவர் தமது தொழிலைக் கைவிட்டு ஒரு சாதாரண இந்திய குடிமகனைப் போல ‘கதர்’ ஆடை அணிந்து வாழ்ந்து காட்டினார்.
தம்மைப் போலவே தாம் சார்ந்தவர்களையும் எளிமையான போக்கோடு கொள்கைப்பிடிப்புடன் மகாத்மா காந்தி வழிநடத்தினார்.
ஆனால் இலங்கையில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் மட்டுமல்ல, ஏனைய தமிழ் அரசியல் தலைவர்கள் கூட அப்பழுக்கற்ற விதத்தில் தமது மக்களுக்காகப் பாடுபட்டிருக்கவில்லை.
செல்வநாயத்திற்குப் பின்னர் வாழ்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் கூட இளஞ் சந்ததியினரைத் தவறான வழியில் ஆயுதமேந்தத் தூண்டிய நிலையில் தாமும் அழிந்து பாரிய அழிவுகளுக்கும் வழிவகுத்திருந்தனர்.
கடந்த முப்பது வருடகால இருண்டயுகம் அரசியல் ரீதியாக வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு உறுதியான தலைமைத்துவத்தை வழங்கியிருக்கவில்லை.
அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் புதல்வர் சந்திரகாந்தன் கூட ஒருமைப்பாடான அரசியல் நிலைப்பாட்டின் அவசியம் பற்றி கொழும்பில் தாம் கலந்துகொண்ட கருத்தரங்கொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழர்கள் இலங்கையில் எதிர்காலத்தில் பிரிந்து வாழ நினைப்பதோ, தனிவழி செல்வதோ நடைமுறைச்சாத்தியமாக இருக்க முடியாதென சந்திரகாசன் கூறியிருந்தார்.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் புதல்வர் கூறியது காலத்தின் தேவையறிந்து கூறப்பட்டதாகவே இருக்கின்றது.
தற்போது முற்றிலும் மாறுபட்ட நிலையில் புதியதொரு அரசியல் போக்கிற்காக மக்கள் ஏங்கியிருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையிலும், தமிஸழ விடுதலைப் புலிகளின் அதரவாளர்கள் என்று கூறிக்கொள்வோர் வெளிநாடுகளிலும், சர்ச்சைகளுக்கு மீளவும் இடமளிப்பவர்களாக நடந்த கொள்கின்றனர்.
‘நாடு கடந்த அரசு’ என்ற புதிய கோஷமும் வெளிநாடுகளில் உள்ள விஷம சக்திகளின் பொறுப்பற்ற நடவடிக்கையாக இருக்கின்றது.
புலம்பெயர்ந்தவர்கள் நாடுகடந்த நிலையில் நட்டாமுட்டித்தனங்களில் ஈடுபடுவதை விட அமைதியை நோக்கி நகர ஆரம்பித்துள்ள தமது தாய்நாட்டைப் பற்றி நல்லதையே நினைக்க வேண்டியவர்களாகின்றனர்.
ஆயிரமாயிரம் விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள் என வடக்கு, கிழக்கு மக்களில் அநேகர் தமது எதிர்காலத்தை நினைத்து நொந்தவர்களாக இருக்கின்றனர்.
சிறைகளில் கூட நூற்றுக்கணக்கானவர்கள் அடைப்பட்டுக்கிடக்கின்றனர். இடம்பெயர்ந்தவர்களாக ஆயிரக் கணக்கானோர் இருக்கின்றனர். எனவே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது சொந்த பந்தங்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக மிளிர வேண்டுமே தவிர, மீளவும் ஓர் இருண்ட யுகத்தை நோக்கி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாகாது.
இலங்கையில் யுத்தத்துடன் கூடிய ‘இருண்டயுகம்’ முடிவுக்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை விரிவான முறையில் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் புலிகளது பெயரைக் கூறி நிதி சேகரித்து வெளிநாடுகளில் வாழ்க்கை நடத்தியோர் மீளவும் தமது சொந்த நலன்களுக்காகவே புலம்பெயர்ந்த அப்பாவித் தமிழர்களையும், இலங்கையில் இருக்கின்ற தமிழர்களையும் ஏமாற்றப் பலதரப்பட்ட வேலைத் திட்டங்களிலும் குதித்துள்ளனர்.
இத்தகையோரிடம் இருந்து உதவி, ஒத்தாசைகளை நல்ல நோக்கங்களுக்காகப் பெறுவதென்பது ‘கல்லில் நார் உரிப்பதைப்’ போன்றதாகவே இருக்கும். ஆகவே ஆக்கபூர்வமான அமைதி முயற்சிகளுக்கும், சமாதான சகவாழ்வுக்கும் உதவ முடியாதவர்கள் உபத்திரவத்தையாவது செய்யாதிருத்தல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக