10 மே, 2010

மன்னார் பஸ்தரிப்பு நிலையப் பகுதியில் இனம் தெரியாத சிலர் கடத்த முயற்சி செய்துள்ளனர்.

மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவரை இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் பஸ்தரிப்பு நிலையப் பகுதியில் இனம் தெரியாத சிலர் கடத்த முயற்சி செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மன்னாரில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது:

மன்னார் எழுத்தூர், செல்வநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர் த. கவிதரன் (வயது 10) அங்கிருந்து, பாடசாலைக்குப் பஸ்ஸில் செல்வது வழமை. இன்றும் அவர் மன்னார் பசார் பகுதியில், பஸ்ஸிலிருந்து இறங்கி பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

இதன்போது பசார் பகுதியில் சற்றுத் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற வாகனத்தின் கதவு திறக்கப்பட்ட நிலையில், மாணவரை பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற சிலர் முற்பட்டனர்.

எனினும் மாணவர் கூச்சலிட்டதையடுத்து, சற்றுத் தொலைவில் நின்ற வீதிப் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் ஓடி வந்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் மாணவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் மாணவர் தனக்கு நடந்த சம்பவம் குறித்துப் பாடசாலை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். பாடசாலை அதிபர் பொலிஸரிடம் முறையிட்டுள்ளதோடு பெற்றோருக்கும் அறிவித்துள்ளார்.

தன்னைக் கடத்த முயற்சி செய்யப்பட்ட வாகனத்தில் 6 பேர் இருந்ததாகவும் அதில் 4 பேர் முகத்தை மூடிக் கட்டியிருந்தாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற பெற்றோர், பாடசாலை முடிவுறும் நேரத்தில், தமது பிள்ளைகளை அழைத்துச் செல்ல சகல பாடசாலைகளுக்கும் விரைந்து சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக