8 ஏப்ரல், 2010

தேர்தல் சட்ட விதிகளை மீறினால் பொலிஸார் கடும் நடவடிக்கை

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்களென பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

நீதியானதும், அமைதியானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், திட்டமிட்டபடி உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தேர்தலை குழப்ப முடியாத வகையில் வடக்கு, கிழக்கு உட்பட 22 தேர்தல் மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும், அவர்களுக்கு உதவியாக பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென்று சுட்டிக்காட்டினார்.

எந்தவித அச்சமுமின்றி பொது மக்கள் நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்த பொலிஸ் மா அதிபர், தேர்தலின்போதும் அதன் பின்னரும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நிலைமைகளையும் சமாளிக்கும் வகையில் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை, இன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 58 ஆயிரத்து 877 பொலிஸாரும், 19 ஆயிரத்து 800 முப்படையினரும், 2000 பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் நேற்று அதிகாலை தொடக்கம் தமக்கு வழங்கப்பட்ட பிரதேசங்களில் கடமைகளை பொறுப்பேற்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

இதேவேளை, தீவிர கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 2, 584 விசேட நடமாடும் பிரிவினரும் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர் என்றார்.

தேர்தல் சட்ட விதிமுறைகள் எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலில் உள்ளதாக தெரிவித்த அவர், இன்று முதல் ஏழு நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

தேர்தலைத் தொடர்ந்து தமிழ்- சிங்கள புத்தாண்டை பொது மக்கள் கொண்டாடுவதற்குத் தயாராக உள்ளதால் அதனைக் குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 500 மீற்றருக்குட்பட்ட பிரதேசங்களில் இன்றைய தினம் கூடி நிற்பது, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகுமென்றும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக