பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் நாடு முழுவதிலுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தேர்தல் மாவட்டங்களிலேயே கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது பொதுத் தேர்தலாகையால் இத் தேர்தலைக் கண்காணிக்கவென அதிகளவிலான பிரதிநிதிகளை வடக்கு, கிழக்கில் ஈடுபடுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிரதிநிதிகளில் 12 ஆயிரத்து 700 பேர் வாக்குச்சாவடிகளினுள் இருந்தபடி இத்தேர்தலை கண்காணிப்பர் என்றும் அவர்கள் கூறினர்.
தேர்தல்களை வாக்குச்சாவடிகளினுள் இருந்தபடி கண்காணிப்பதற்காக பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதேநேரம் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிப்பதற்கும் தேர்தல் ஆணையாளர் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இம்முறை அனுமதி வழங்கியுள்ளார்.
இவ்விரு அமைப்புக்களும் மாவட்டத்திற்கு ஒருவர் படி 44 பேரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளது.
இதேவேளை வடக்கு கிழக்கு மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவென பெப்ரல் அமைப்பு ஐந்து விஷேட குழுக்களைக் கொழும்பிலிருந்து அனுப்பி வைத்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறினார். இத்தேர்தலை கண்காணிக்கும் பணிக்கென பெப்ரல் அமைப்பு 16 வெளிநாட்டு பிரதிநிதிகளையும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் நால்வரையும் வரவழைத்துள்ளது.
இவர்களிலும் அதிகமானோர் வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலேயே கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் கூறினர். பெப்ரல் அமைப்பு 10697 பிரதிநிதிகளையும், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் 4192 பேரையும் கபே நிறுவனம் 6000 பேரையும் ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக