28 மார்ச், 2010

அரசியல் யாப்பை அரசு முழுமையாக திருத்தாது மஹிந்தயில் சிந்தனை உள்ளவை மட்டுமே திருத்தப்படும் - சம்பிக்க






அரசியல் யாப்பை அரசாங்கம் முழுமையாக திருத்தம் செய்யாது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மட்டுமே திருத்தப்படும். வெளிநாட்டு அழுத்தம் காரணமாக அரசாங்கம் யாப்பை முழுமையாக திருத்தப்போவதாக வும் இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை முழுயாக நிராகரிப்பதாக அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (28) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

மக்களின் 2/3 பெரும்பான்மை பலத்தைப் பெற்று இந்த அரசியல் யாப்பை திருத்த அரசாங்கம் தீர்மானத்துள்ளது. அரசியல் யாப்பில் எந்தெந்த பகுதிகள் திருத்தப்படும் என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. யாப்பில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அந்தப் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும்.

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய பதவியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்துள்ளோம். அமைச்சுக்களின் ஆலோசனை சபை முறையை மாற்றவும் பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களை பலப்படுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவை எவ்வாறு மாற்றப்படும் என விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரதேச சபைகளின் எல்லைகளை மாற்றி கூடுதல் அதிகாரம் வழங்கவும் சகல கிராம சேவகர் பிரிவிலும் ஜனசபாக்களை அமைக்கவும் தொகுதிவாரி முறையையும் விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையொன்றை அறிமுகப்படுத்தவும் உள்ளோம்.

17 வது திருத்தத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அதனை திருத்தி ஒழுங்கான முறையாக மாற்றப்படும்.

யாப்பிலுள்ள சில பகுதிகளை சிறிய பெரும்பான்மை பலத்துடன் மாற்றலாம். சில பகுதிகளை 2/3 பலத்துடனும் சர்வஜன வாக்குடனும் மாற்ற வேண்டும். யாப்பை முழுமையாக திருத்தும் தேவை அரசுக்கு இல்லை. 1978 ஆம் ஆண்டில் போன்று யாராலும் முழுமையாக யாப்பை திருத்த முடியாது.

பிரதான கட்சிகள் யாவும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. அவை வெறும் தேவதைக் கதைகளாகவே உள்ளன.

உலக நாடுகளில் லிபரல் பொருளாதார கொள்கைகள் அழிந்து விட்டன. ஜப்பான் முதல் அமெரிக்காவரை இன்று மஹிந்த சிந்தனையில் உள்ளவாறு உள்நாட்டு பொருளாதார முறைகளை பின்பற்றுகின்றன. உலக நாடுகள் கைவிட்ட லிபலர் பொருளாதார முறையை ரணில் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

மின்சாரத்துறையை அழித்த ரணில் சகலருக்கும் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இன்று 88 வீதமான மக்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட் டுள்ளது. 3 வருடத்திற்குள் சகலருக்கும் மின்சாரம் வழங்கப்படும். கையடக்கத் தொலைபேசி பாவனை செய்வோர் தொகை 3 மில்லியனில் இருந்து 14 மில்லியனாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அறிவு 30 ஆக அதிகரித்துள்ளதோடு 6 வருடத்தில் 60 வீதமாக உயர்த்தப்படும்.

1983 கலவரத்தை தூண்டி நாட்டை சீரழித்தது ஐ.தே.க. அரசாங்கமே. ஆனால் இன்று அந்தப் பொறுப்பை சகல சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் ஏற்க வேண்டும் என்று ரணில் கூறியுள்ளார். ஐ.தே.க. வின் தவறினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நாட்டு மக்கள் பொறுப்பல்ல.

யுத்தக் குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்க ளுக்கு எதிராக அரசாங்கம் அமுலில் உள்ள சட்டங்களின் படியே நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ.தே.க. ஆட்சிகளைப் போன்று வதை முகாம்களை அமைத்து எமது அரசு தண்டனை வழங்காது. புதிய பாராளுமன்றத்தில் தெரிவாகும் ஐ.தே.க. எம்.பிகளில் படித்தவர்கள் அரசியல் யாப்பை திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக