28 மார்ச், 2010

தேர்தலுக்கு பின்னரான ஐ.தே.மு அரசாங்கத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள்:ரணில்



ஏப்ரல் 8ஆம் திகதிக்கு பின்னர் அமையும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் மக்களுக்கான பல நிவாரணங்கள்,விவசாய,கடற்றொழில்,தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு செயற்பாடுகள்,முதலீட்டு வலயங்கள் உட்பட இன்னும் பல்வேறு திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புத்தளத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி புத்தளம் மாவட்ட 7 ஆம் இலக்க வேட்பாளர் டி.எம்.இஸ்மாயில் ஹாஜியாரினால் புத்தளம் நகர மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பேசும் போது கூறியதாவது,

"நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.அதிகப்படியான அமைச்சர்களை இந்த அரசாங்கம் கொண்டுள்ளது.எதையும் மக்களுக்கு செய்யவில்லை.மாறாக அமைச்சர்கள் மட்டும் நலமாக வாழ்கின்றனர்.மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரியாது.

அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பள அதிகரிப்பான 250 ரூபாவை வழங்க முடியாதுள்ளது.தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்குவது மஹிந்த ராஜபக்ஷவின் வேலை.அவற்றை மாற்றி மக்கள் ஆட்சியை நாம் ஏற்படுத்த தயாராகிவிட்டோம்.புத்தளம் தொகுதியில் உள்ள மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை நல்கிவருகின்றனர் என்பதை மறக்க முடியாது.

இன்று விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் அறுவடைகளுக்கு நல்ல விலை வழங்கப்படுவதில்லை மாறாக ஆலை உரிமையாளர்கள் சிலருக்கு அரசாங்கம் பணத்தை கொடுத்து குறைந்த விலைக்கு நெல் கொள்வனவு இடம் பெறுகின்றது.

இது இம்மக்களுக்கு செய்கின்ற அநியாயமாகும்.ஆனால் எமது ஆட்சியில் அவற்றை மாற்றுவோம்.அதற்கான திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.நெல்லுக்கான உத்தரவாத விலையாக நாடு கிலோ ஒன்றுக்கு 35ரூபாவும்,சம்பா கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவும் கொடுத்து கொள்வனவு செய்யவுள்ளோம்.நெற்செய்கையாளர்களை ஒன்று சேர்த்து அவர்களது பிரதேசத்தில் களஞ்சியங்களை ஏற்படுத்தவுள்ளோம்.

அறுவடைமுடிந்ததும் நெல்லை விற்கும் வரை வங்கியிலிருந்து 70 சதவீதமான நிதியினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுப்பதுடன்,நெல் விற்கப்பட்டதும் அத்தொகையினை மீள வங்கிக்கு செலுத்துவதற்கான வசதிகளை எற்படுத்தவுள்ளோம்.

நெல் கொள்ளவனவு செய்யயும் ஆலை உரிமையாளர்களை பதிவு செய்யவுள்ளோம்.மோசடியாக அல்லது குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்களின் பதிவுகளை இரத்துச் செய்ய நடவடிக்கையெடுப்போம்.

குறிப்பாக பசளைகளை ஒரே இடத்தில் கொள்வனவு செய்யும் நிலை மாற்றப்பட்டு திறந்த சந்தைகளில் அவற்றை பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் எற்படுத்தி கொடுக்கப்படும்.

அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் கல்நடை வளமேம்பாடுகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு கரவை மாடுகள் தலா நான்கு வீதம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். தென்னந்தோட்ட மேம்பாடுகளுக்கு நிவாரணம் வழங்கவுள்ளோம்.இரண்டு வருடத்துக்கு பசளைகள் நிவாரண அடிப்படையில் வழங்கப்படும்.

1 ஏக்கர் நிலப்பரப்புக்கு 75 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க நடவடிக்கையெடுக்கப்படும்.அதேபோல் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எமது நாட்டில் தொழில் பிரச்சினை மற்றுமொன்றாகும்,அவற்றை தீர்க்க அரச,தனியார் துறைகளிலும்,சுயதொழில் துறைகளிலும் அவற்றை பெற்றுக் கொடுக்க முடியும்.அதற்காக வேண்டி எம்மிடமிருந்து சென்றுள்ள ஜீ.எஸ்.பி வரிச்சலுகைகளை மீளபெற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் மூலம் எமது நாட்டு உற்பத்திளுக்கான சந்தை வாய்ப்புக்கள் ஏற்படும்.ஐரோப்பாவில் 50 கோடி ருபாவுக்கான சந்தை வாய்ப்புக்களும்,இந்தியாவில் 100 கோடி ரூபாவுக்கான சந்தை வாய்ப்புக்களும் உண்டு.அவற்றை எம்மால் பெற முடியும்.இதனால் முதலீட்டாளர்களின் வருகை அதிகரிக்கும்.

எமது ஆட்சியில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.மிகவும் சுதந்திரமாக வாழ்வதற்கான உத்தரவாதம் வழங்கப்படும்.அரசியல் ரீதியலான சுதந்திரம் ஏற்படுத்தப்படும்.ஆனால் ஊழலுக்கு இடமிருக்காது.

முதல் இரண்டு வருடத்தில் மக்கள் மேம்பாடு சார்ந்த அனைத்து முதலீடுகளும் செய்யப்படும்,தொடர்ந்துவரும் மூன்று வருடங்களில் அதனது பலாபலன்களை நாம் பெறுவோம்.எமது ஜந்து வருட காலத்தின் பின்னர் மீண்டும் தேர்தலுக்கு செல்வோம்."என்றும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்க பண்டார,லெரின் பெரேரா உட்பட பலரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக