28 மார்ச், 2010

சாவகச்சேரியில் கப்பம் கோரி கடத்தப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு



யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் காணாமல் போனா பாடசாலை மாணவன் நேற்றுப் பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை டச்சு வீதியை சேர்ந்த 17 வயதுடைய திருச்செல்வம் கபில்நாத் என்ற மாணவனே இரு வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நீதிவான் டி.ஜே.பிரபாகர் முன்னிலையில் இவரின் சடலம் வாழைத்தோட்டம் ஒன்றிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. இதனையடுத்து சடலம் நேற்று மாலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இரவு 7 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவருடைய மகனான இம்மாணவன் இரு வாரங்களுக்கும் முன்னர் வீட்டிலிருந்த சமயம் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்த சிலரால அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இதனையடுத்து இம்மாணவரது பெற்றோரிடம் 3 கோடி ரூபாவை அழைத்துச்சென்ற நபர்கள் கப்பமாகக் கோரியு தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கபில்நாத்துடன் பயிலும் மூன்று மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று டச்சு வீதியில் வீடொன்றில் பின்புறத்தில் வாழைத்தோட்டத்திலிருந்து கபில்நாத்தின் சடலம் வெட்டப்பட்டநிலையில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனாவைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்ட சடலம் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக