17 மார்ச், 2010

பூகம்ப ஆபத்து வலயங்களையும் தாண்டி தாக்குகிறது நிலநடுக்கம்

“நெஞ்சுயர்த்தி வாழ்ந்தவொரு குடிவாழ்க்கை இடி விழுந்து எல்லாமிழந்து இருக்கிறது சூனியமாய் நாளையிது மீண்டும் அழகொளிர நிமிர்ந்திடுமா?”

என்று இயற்கை அனர்த்தத்தால் சிதையுண்ட நகரைப் பார்த்து வருத்தத்துடன் கேட்டிருந்தான் கவிஞனொருவன்.

மனிதனுக்கு அமைதி என்றொரு முகமிருந்தால், சீற்றம் என்றொரு முகமும் இருக்குமென்றே கூறுவர். அகம்-புறம், நன்மை-தீமை, உண்டு-இல்லை என எந்தவொரு விடயத்தையும் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு கோணங்களில் நோக்கமுடியும். அக்கோணங்களுக்குள் அடக்கவும் முடியும்.

1,0 என்ற ஒன்றுக் கொன்று முரணான இரு இலக் கங்களினடிப்படையிலேயே கணனித் தொழில்நுட்பம் இன்று வரை புதிய பல பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. இயற்கையும் அத்தகையதே.

இளந்தென்றலாய் வீசும் இயற்கைதான் கொடிய புயலையும் வீசச்செய்கிறது. அமைதியாய்ச் சென்று கடலோடு கலக்கும் ஆறுகள் தான் சிலசமயங்களில் காட்டாறுகளாய் மாறி உயிர்களைக் காவுகொள்கின்றன. நுரையாய் நிலத்தைத் தழுவும் கடலலைதான் ஆழிப்பேரலை அனர்த்தமாய்த் தன் கோரமுகத்தைக் காட்டி நின்றது.

நாம் கொத்தி, பாரத்தை ஏற்றி எத்தனை துன்பம் செய்தாலும் பொறுமையாய்த் தாங்கிக் கொள்ளும் பூமாதேவிதான், சில சமயங்களில் புவி நடுக்கமாய், எரிமலை வெடிப்பாய்ச் சீற்றம் கொள்கிறாள்.

புவிக்கோளத்தின் வெளிப்பகுதியே நாம் காணும் நிலப்பரப்புக்களும் நீர்ப்பரப்புக்களுமாகும். புவிக்கோளம், தன்னுள்ளே பல படைகளைக் கொண்டது. வெளிப்பகுதி புவியோடு எனப்படும். அதற்கு அடுத்த படைகள் முறையே மேல் மென் மூடி, கீழ் மென்மூடி, அகணி ஆகியனவாகும்.

புவியோட்டையும் மேல்மென் மூடியையும் சேர்த்து கற்கோளம் என்பர். இந்த கற்கோளமே தனித்தனியாக அசையக்கூடிய புவித்தட்டுக்களைக் கொண்டது. இப்புவித்தட்டுக்களே கண்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அரீனா முனையிலிருந்து இம்பீரியல் பள்ளத்தாக்குவரை ஏறத்தாழ 1000 கி.மீ நீளமுடைய வெடிப்பொன்று புவி மீது காணப்படுகிறது.

இது புவியின் நிலத்தட்டு எல்லைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வெடிப்பின் ஒருபக்கத்தில் வட அமெரிக்க நிலத்தட்டும் மற்றைய பக்கத்தில் பசுபிக் நிலத்தட்டும் காணப்படுகின்றன. இவ்வெல்லையை சான் அன்றியாஸ் குறையென அழைப்பர். இந்த இரு நிலத்தட்டுக்களும் ஒரு வருடத்துக்கு 2.5 செ.மீ. அளவில் வழுக்கியும் உராய்ந்தும் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலத்தட்டுக்கள் புவியின் கற்கோளப்பகுதியில் காணப்படுகின்றன. அத்துடன் அவை தாமாகவே அசையும் வல்லமை மிக்கவை. அவற்றின் அசைவே நிலநடுக்கங்களுக்கான அடிப்படையாகும்.

தட்டுக்களின் அசைவு குறைமேற்பரப்புக்களையும் தோற்றுவிக்கும். இந்தக் குறைதட்டுக்கள் தமது எல்லைப் பகுதிகளில் ஒழுங்கற்றதாகக் காணப் படுவதுடன் ஒன்றுடனொன்று வழுக்கியும் உராய்ந்தும் செல்லும் தன்மையுடையனவாகக் காணப்படுகின்றன.

இத்தட்டுக்களுக் கிடையிலான சார்பியக்கம், அவற்றிற் கிடையிலான தகைப்பை அதிகரிக்கும். இது பெரியளவிலான விகார சக்தியை குறைமேற்பரப்புக்களில் உருவாக்கும்.

தட்டுக்களுக்கிடையே ஏற்படும் உராய்வினாலான வெப்பம் பாறைகளில் வெடிப்பை ஏற்படுத்தும். இவ்வெடிப்பு பூமியதிர்ச்சிக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பூமி அதிர்வுகள் இந்த குறை மேற் பரப்புக்களாலேயே தோற்றுவிக்கப்படும். பல பூமியதிர்வுகள், தட்டுக்களின் எல்லைக்கு அப்பாலேயே நிகழும். அவற்றினால் உருவாக்கப்படும் விகாரம் குதீறேமேற் பரப்புக்களில் ஒழுங்கற்ற தன்மையை உருவாக்கும்.

இவ்வொழுங்கற்ற தன்மையே அழிவுகளுக்குக் காரணமாகும். எரிமலைப் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி அடிக்கடி நிகழும். இவ்வாறு நிகழ்வதற்கு புவித்தட்டுக்களின் குறைமேற்பரப்பும் எரிமலையின் மக்மாக் குழம்பின் அசைவும் காரணமாகின்றன. எரிமலை வெடிக்கப்போவத ற்கான ஆரம்ப சமிக்ஞையாக அப்பகுதிகளில் ஏற்படும் பூமியதிர்ச்சியைக் கருதலாம்.

பூமிக்கு அடியிலிருக்கும் இந்த நிலத்தட்டுக்களின் மோதுகையாலோ அல்லது அசைவினாலோ உருவாக்கப்பட்ட அதிர்வலைகள் புவிமேற்பரப்பில் பரவும் போது நிலநடுக்கமாக உணரப்படுகின்றன. நிலமேரப்பில் மட்டும் தான் அவை உணரப்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை.

சமுத்திர மேற்பரப்புகளிலும் கூட அவை உணரப்படலாம். அவ்வாறு சமுத்திர மேற்பரப்பில் உணரப்பட்ட கடலடி நில நடுக்கத்தின் விளைவே 2004 இல் நாம் கண்ட ஆழிப்பேரலை அனர்த்தமாகும்.

உலக வரைபடத்திலே நெருப்பு வலயங்கள் எனும் நிலநடுக்கப் பிரதேசங்களாகச் சில பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

தென்னமெரிக்க முனையின் மேற்குக் கரையோரத்தில் தொடங்கி, சிலி, பெரு ஆகிய நாடுகளை உள்ளடக்கிப் பின் மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியைக் கடந்து கொஸ்தாரிக்கா, நிகராகுவா, மெக்சிக்கோ, கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்கள் வழியாக அலஸ்காவைத் தொட்டு ஜப்பான், சீனா, வட இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தாண்டி மத்திய ஆசியாவிலே ஈரானையும் உள்ளடக்கி பின் மத்திய தரைக்கடல் நாடுகளுடன் முடிவடைகிறது. ஆனால் இவ்வலயத்தில் இல்லாத நாடுகளிலும் கூடப் புவிநடுக்கம் ஏற்படலாமென்பது நிதர்சனமான உண்மையாகும்.

நிலநடுக்கம், புவியின் குறிப்பிட்ட பகுதியில் தான் நடக்க வேண்டுமென்ற எந்தவொரு நிர்ப்பந்தமுமில்லை. அவை எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். சிறியளவிலான நில அதிர்வுகள் அடிக்கடி நடப்பவையல்ல. ஏறத்தாழ 100 வருடங்களுக்கொரு முறையே பெரியளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக, ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

நில அதிர்வுகள் / நடுக்கங்களின் தன்மையை அளவிடுவதற்கு ‘ரிச்டர்’ எனும் அளவிடை பயன்படுகிறது. அளப்பதற்கு புவிநடுக்கமானி அல்லது நிலநடுக்கப் பதிகருவி எனப்படும் கருவி பயன்படுகிறது. இக்கருவியை சார்ள்ஸ் ரிச்டர் என்பவர் கண்டுபிடித்தமையினால் நில நடுக்க அளவிடை ‘ரிச்டர்’ எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மேக்கலி எனும் அளவுத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. இது மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதேயன்றி ரிச்டர் அளவிடையைப் போன்று விஞ்ஞானபூர்வமானதல்ல. தற்போது திருப்பப் பருமனை அடிப்படையாகக் கொண்ட அளவிடையாக (ஙச்ஙிடீடூசி ஙஹகிடூடுசிசீக்ஷடீ நஷஹங்டீ) புதிய அளவிடையொன்று பயன்படுத்தப்படுகிறது.

நடுத்தரப் பருமனுடைய பூகம்பங்களைப் பொறுத்தவரையில் ரிச்டர் அளவிடையும் இந்தப் புதிய அளவிடையும் ஒரேவிதமானவை. ஆனால் பெரிய பருமனுடைய பூகம்பங்களில் அவ்விரு அளவிடைகளும் வேறுபடும்.

எனினும் ரிச்டர் அளவிடையே புழக்கத்தில் உள்ளது. நிலநடுக்கத்தின் ரிச்டர் அளவு 7 அல்லது அதற்கு மேற்பட்டதாயின் ஆபத்தான விளைவுகளை, பரந்தளவிலான பிரதேசங்களில் ஏற்படுத்துமெனவும் ரிச்டர் அளவு 3 அல்லது அதற்குக் குறைவாயின் நிலநடுக்கத்தை உணரமுடியாது எனவும் 3 க்கும் 7 க்கும் இடைப்பட்டளவிலான பருமனுடைய நிலநடுக்கங்கள் சிறியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

ரிச்டர் அளவுகள் மடக்கைப் பெறுமதியிலானவை. 7 ரிச்டர் அளவானது. 6 ரிச்டர் அளவை விட 31.6 மடங்கு (10 3/2 மடங்கு) பெரியது. அதேசமயம் 5 ரிச்டர் அளவைப்போல் கிட்டத்தட்ட 1000 மடங்கு (998.56 மடங்கு) பெரியது. 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தத்திற்குக் காரணமாகிய நிலநடுக்கம் அண்மையில் சிலியில் நடந்த நிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 1000 மடங்கு பெரியது எனலாம்.

நிலநடுக்கத்தால் உருவாக்கப்படும் நில அதிர்வலைகள் (நடீடுஙூஙிடுஷ சூஹசுடீஙூ) நெட்டாங்கு அலைகளாகவோ, அவற்றிற்கு எதிர்மாறான குறுக்கலைகளாகவோ இருக்கலாம். இவ்வலைகளின் வேகம் 3கூசீ/ஙூ இலிருந்து 13கூசீ/ஙூ வரை மாறுபடும். அத்துடன் இவ்வேகமானது அவ்வலைகள் பயணிக்கும் ஊடகத்தின் அடர்த்தியிலும் மீள்தன்மையிலும் தங்கியிருக்கும்.

நடீடுஙூஙிச்ஙிடீசிடீஙு எனப்படும் நிலநடுக்கமானியால் நிலநடுக்கத்தின் பருமனையும், அது அம்மானியிலிருந்து எவ்வளவு தூரத்தில் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடியும். நிலநடுக்கமானியிலிருந்து பெறப்படும் தரவுகளினடிப்படையிலேயே வரைபுகள் வரையப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படு கின்றன.

அத்தகையதொரு ஆய்வே, புவியின் மையப்பகுதியின் அமைவை மிகச்சரியாக அறிந்து கொள்ளவும் உதவியது. பெனோகுட்டன்பேர்க் என்பவரே புவியின் மையப்பகுதியின் அமைவிடத்தை 1913 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.

கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவிலேயே நிலநடுக்கம் தொடர்பான எண்ணக்கரு, கிரேக்க தத்துவஞானிகளால் விதைக்கப்பட்டு விட்டது. நிலநடுக்கங்களானவை காலங்காலமாக நிகழும் செயற்பாடுகள் என வரலாறு கூறுகிறது. இத்தாலியின் பழம் பெரும் நகராகிய பொம்பேய் நிலநடுக்கத்திற்குப் பெயர் போனது. நிலநடுக்கங்களால் சிதைந்த அந்நகரின் இடிபாடுகளை இன்றும் காணமுடியும்.

நிலநடுக்கங்களால் உருவாகும் ஆழிப்பேரலைகளுடன், கடற்கோள் அனர்த்தங்களும் புவித்தட்டுக்களின் நகர்வுமே இன்றும் நாம் காணும் கண்டங்களாகும். மறைந்துபோன குமரிக்கண்டமும் கடல் கொள்ளை கொண்ட பூம்புகார் நகரும் கூட நிலநடுக்கங்களுக்குச் சான்று பகரும் வரலாற்று ஆதாரங்களாகும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து யுரேசியா எனும் பெயருடைய கண்டமாக இருந்தனவெனவும் ஒரு பெரும் பூகம்பத்தால் ஆசியா, ஐரோப்பா என தனித்தனிக் கண்டங்களாகப் பிரிந்தனவெனவும் கூறப்படுகிறது. ஆயினும் தெளிவான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை.

1755 ஆம் ஆண்டு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கடலடி நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. அதனால் உருண்கிய ஆழிப்பேரலைகளால் போர்த்துக்கல்லின் தலைநகராகிய லிஸ்பன் பெரியளவில் பாதிக்கப்பட்டது. லிஸ்பன் துறைமுகம் பழம் பெருமை வாய்ந்தது. அத்துடன் செல்வந்தப் பகுதியாகவும் விளங்கியது. லிஸ்பனில் மாத்திரம் 30,000 பேர் ஆழிப்பேரலையின் கோரப்பசிக்கு காவுகொடுக்கப்பட்டனர். அன்று வீழ்ந்த லிஸ்பன் நகரால் இன்றும் கூட, பழைய நிலைமைக்கு மீளமுடியவில்லை.

1989 இல் சென்பிரான்சிஸ்கோ நகரை உலுக்கிய பூகம்பத்தை எவரும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்படுத்தப்படும் விளைவுகள் வரையறுக்கப்பட்டவையல்ல. அவற்றின் முக்கிய விளைவான நில மேற்பரப்பின் அதிர்வு காரணமாக கட்டடங்கள் போன்ற உறுதியான கட்ட மைப்புக்கள் பெரியளவில் பாதிக்கப்படு கின்றன. சிறியளவிலான நிலநடுக்கங்கள் கூடப் பாரிய சேதங்களைத் தோற்றுவிக் கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

நில அதிர்வுகளுடன் கூடிய எரிமலை வெடிப்பு மண்சரிவைத் தோற்றுவிக்கும். நில அதிர்வுகளால் நிலத்துக்குக் கீழாகச் செல்லும் எரிவாயு மற்றும் மின்னிணை ப்புக்கள் சேதமுற்று, தீ பரவலாம். அவ் வாறு தீ பரவும் போது அதைக் கட்டுப்படுத்துவது சற்றுக் கடினமானது.

1906 இல் சென்பிரான்சிஸ்கோவில் நடந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தைவிட மேற்குறிப்பிட்டவாறு பரவிய தீயினால் ஏற்பட்ட சேதம் மிக அதிகமாகும்.

மண் திரவமயப்படலானது பூகம்பத்தால் ஏற்படும் பாராதூரமான விளைவாகக் கருதப்படுகிறது. நில அதிர்வினால் மண் போன்ற நீர் நிரம்பிய துணிக்கைப் பதார்த்த்ஙகள் தமது வலிமையை இழந்து திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும். இவ்வாறு மண் துணிக்கைகள் மாறுவதால் கட்டடங்கள், பாலங்கள் போன்ற உறுதியான நிர்மாணங்கள், திரவமயமாக்கப்பட்ட படிவுகளிலே மிதந்து தாமே இடிந்து தரைமட்டமாகிவிடுகின்றன.

அத்துடன் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்படும் அணைக்கட்டுக்கள் சிதைவடைவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமானதாகக் காணப்படும்.

இவை யாவற்றிற்குமப்பால் பூமியதிர்ச்சியா னது மனித உயிருக்கும் வாழ்வுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் அளவிடப்பட முடியாதன.

ஒரே தரத்திலேயே பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுக்கும் இயற்கை அனர்த்தமாகப் பூமியதிர்ச்சி கருதப்படுகிறது. இவை தவிரப் பல நோய்கள் பரவுவதற்கும், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, சொத்துக்களின் இழப்பு, உட்கட்டமைப்பு வசதிகளின் அழிவு போன்ற பல பிரச்சினைகளால் மனிதனின் வாழ்வியல் பாதிக்கப்படுவதற்கு ஏதுவாகிறது.

அண்மையில் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட ஹெயிட்டி பூகம்பத்தால் அந்த நாடே உருக்குலைந்து போனதை வெகுசனத்தொடர்பு ஊடகங்களால் காணக்கூடியதாக இருந்தது.

சில பகுதிகளில் ஏற்படும் நிலநடுக் கங்களுக்கு வல்லரசுகளின் நாசகார ஆயுதப் பரிசோதனைகள் காரணமாக அமைவதாக ஊகங்களும் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் அவ்வூகங்கள் எவையுமே உத்தியோகபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

வருடாந்தம் நிகழும் பூகம்பங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் நடக்கும் பூகம்பங்களையும், அவற்றினால் ஏற்படும் சேதங்களையும் உடனுக்குடன் அறியத்தரும் வகையில் கூகிள் மப்ஸ் எனும் இணையத்தளம் இன்னொரு இணையத்தளத்துடன் இணைந்து செயற்படுகிறது. அவ்விணை யத்தளமானது வரைபடங்கள், நடுக்கத்தின் பருமனுடன், தேவையான அடிப்படைத் தகவல்களை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறது.எனும் முகவரியூடாக அவ்விணையத்தளத்தைப் பார்வையிட முடியும்.

ஹெய்ட்டியின் பூகம்பம் மக்கள் மனதிலே ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளேயே சிலி அருகே பசுபிக் பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.

சிலி, பெரு, ஈக்வடார் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 8.8 ரிச்டர் அளவான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டங்கள் இடிந்து விழுந்தன. பலர் உயிரிழந்தனர். கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

நடக்கும் பூமியதிர்ச்சிகளையும், அவற்றினால் ஏற்படும் அழிவுகளையும் ஆழ நோக்குகையில், தன்னை விஞ்சியவர் எவருமில்லை என்று வாழும் மனிதனுக்கு, மனித வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் இயற்கையின் செயற்பாடுகள் தான் இவையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

விஞ்ஞானத்தாலும் அதன் பயனால் உருவாக்கப்பட்ட அறி கருவிகளாலும் நிலநடுக்கங்களின் வருகையை எதிர்பார்த்து அறிவிக்க முடியுமே தவிர அவற்றைத் தடுக்க முடியாது. நிலநடுக்கம் இன்னும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட, புதிராகவே காணப்படுகிறது.

எம்மால் செய்யக்கூடியது, ஏற்படும் சேதங்களைக் குறைத்தலும் இனியும் சேதங்கள் ஏற்படாமல் தவிர்த்தலுமேயாகும். பூகம்ப வலயத்தினுள் இருக்கும் ஜப்பான் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

ஜப்பானியர்களின் எளிமையான வாழ்க்கை முறையும், பூகம்பங்களையும் ஆழிப் பேரலையையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான கட்டட அமைப்புக்களும் ஏனைய நிர்மாணப்பணிகளும் தான் எத்தனை பேரழிவு நிகழ்ந்தாலும் ஜப்பான் மீள எழுவதற்குக் காரணமாகின்றன.

ஒவ்வொரு நாடும் தனது அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை இயற்கையைப் பாதிக்காத வகையிலும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் காணப்படுகின்றன என்பதை உறுதி செய்யவேண்டும். அத்துடன் அனர்த்த முகாமைத்துவத்திற்கான வலுவான கட்டமைப்புக்களையும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.

இயற்கையின் சீற்றம் எதிர்வு கூறப்பட முடியாதது. ஆறாவது அறிவாய்ப் பகுத்தறிவைப் பெற்று பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன் பொறுப்புணர்வுடன் நடந்தால் இயற்கையும் சீற்றம் கொள்ளாது அமைதி காக்குமென்பது நிதர்சனம்!

சாரதா மனோகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக