17 மார்ச், 2010

இராணுவ நீதிமன்றில் பொன்சேகா ஆஜர்





2வது மன்றில் இன்று மற்றொரு விசாரணை

முதலாவது நீதிமன்றின் நேற்றைய அமர்வு ஏப்ரல் 6க்கு ஒத்திவைப்பு

(ஸாதிக் ஷிஹான், ரஞ்சித் பத்மசிறி)

ஜெனரல் சரத் பொன்சேகா தனது சட்டத்தரணிகள் சகிதம் இராணுவ நீதிமன்றத்தின் முன் நேற்று ஆஜ ரானதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கடற்படைத் தலைமையகத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான இரண்டாவது நீதிமன்றின் முதல் அமர்வு ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நடைபெறவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவ தலைமையகம் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்:-

மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்க தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட இராணுவ நீதிமன்றம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் கடற்படைத் தலைமையகத்தில் கூடி யது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவுடன் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் ஆஜரானார். அரசாங்கத்தின் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளும் இதன் போது ஆஜராகியிருந்தனர்.

இராணுவ சட்ட விதிமுறைகளுக்கு அமைய நேற்றைய தினம் கூடிய இந்த நீதிமன்றின் முதலாவது அமர்வின் போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய நீதிமன்ற அமர்விலும் சரத் பொன்சேகா ஆஜராவார் என எதிர்பார்க்க ப்படுகிறது. இராணுவ சட்டத்தின் 109 (ரி) பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்றைய இரண்டாவது நீதிமன்றில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

பொன்சேகா தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் இரு இராணுவ நீதிமன்றங்களின் தலைவராக மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவும் அதன் உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ. எல். ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி. ஆர். ஏ. பி. ஜயதிலக்க ஆகியோரும், நீதிபதி, அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவும் செயற்படவுள்ளனர்.

இராணுவ நீதிமன்றின் நேற்றைய அமர்வில்

இராணுவ நீதிமன்றம் கூடியதும், அதன் தலைவர் மேஜர் ஜெனரல் வீரதுங்க குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வாசித்தார்.

இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூற மறுத்த சந்தேக நபரான சரத் பொன்சேகா குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தனக்கு எதிராக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லாத நிலையில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது சட்டத்தரணிகளுடன் இராணுவ நீதிமன்றத்திற்கு சமுகமளித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் அணிந்திருந்த கொலர் உடனான சட்டை மற்றும் நீண்ட காற்சட்டையை அவர் அணிந்திருந்தார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகும் முன்னர் சரத் பொன்சேகாவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன சந்தேக நபர் சார்பாக இரண்டு அடிப்படை எதிர்வாதங்களை எழுப்ப சந்தர்ப்பம் கேட்டுக்கொண்டார்.

இராணுவ நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பமாகும் முன்னர் அதன் நீதிபதிகள் குழுமம் தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மூன்று நீதிபதிகள் மீதும் வெவ்வேறாக அடிப்படை எதிர்வாதத்தை எழுப்புவதாகவும் கூறினார்.

நீதிபதிகள் மூவரும் சந்தேக நபரின் கீழ் சேவையாற்றியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரச குலரத்ன அவர்களுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பதாகவும் இது ஒவ்வொரு நீதிபதி தொடர்பாகவும் வெவ்வேறாக முன்னெடுக்கப்படும் அடிப்படை எதிர்வாதம் என்றும் தெரிவித்தார்.

இராணுவ சட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் தொடர்பாக பரிசீலித்த நீதிமன்றம், நீதிபதிகள் தொடர்பான சந்தேக நபர் மேற்கூறியவாறு முன்வைத்த வாதங்களை வெவ்வேறாக நிராகரித்தது.

சந்தேக நபர் தற்போது இராணுவ சேவையில் இல்லாத நிலையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்த கனிஷ்ட தரத்திலுள்ள நீதிபதிகள் குழுமத்திற்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் வாதங்களை முன்வைக்க விரும்புவதாகவும் அதற்கு தனக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து விசாரணைகள் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக