நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்பைச் செய்யும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு செயற்திட்டங்களை அரசாங்கம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பெண்களுக்குச் சமத்துவம் வழங்குவது என்பதை விட பெண்களுக்கான மதிப்பையும் கெளரவத்தையும் பலப்படுத்துவதே முக்கியமானது. அத்தகைய கெளரவத்தைப் பாதுகாப்பதிலும் பெண்கள் முன்னிற்பது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அம்பாந்தோட் டையில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இலங்கையில் பெண்கள் சகல துறையிலும் முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மகளிர் விவகார சிறுவர் நலன் அபிவிருத்தி அமைச்சு ஒழுங்கு செய்திருந்த தேசிய மகளிர் தின நிகழ்வுகள் நேற்று அம்பாந்தோட்டை சிஹபோபுர சிங்கப்பூர் நட்புறவு நிலைய மண்டபத்தில் நடை பெற்றது. நாடளாவிய ரீதியிலிருந்து மகளிர் அமைப்புக்கள் பல பங்கேற்ற இந்நிகழ்வில் சகல மத, பிரதேசங்களை அடையாளப்படுத்தும் கலை கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
அமைச்சர்கள் சுமேதா ஜீ ஜயசேன, சமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, இளை ஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் :-
சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய இந்நிகழ்வில் நாம் குறிப்பாக நம் நாட்டுப் பெண்கள் சம்பந்தமாக பார்ப்போமானால் உலகில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இது எனலாம்.
பெண்கள் முன்னிலை அதிகாரத்தில் இருந்தமை பற்றி குறிப்பிடும் போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோரை நினைவிற் கொள்ள முடியும். இவர்கள் இருவரது ஆட்சிக் காலத்திலும் நான் பணியாற்றியுள்ளேன்.
எவ்வாறாயினும் எமது ஆட்சிக் காலத்தில் சிறுவர் மற்றும் மகளிர் நலன்களுக்காக தனி அமைச்சொன்றை உருவாக்கி அவர்களுக்குரிய முக்கியத்துவத்தையும் மதிப்பையும் நாம் வழங்கியுள்ளோம்.
இம்முறை மகளிர் தின தொனிப்பொருள் மிகவும் முக்கியமானது. எதிர்கால சுபீட்சமாக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி அது வலியுறுத்துகிறது.
எம்மால் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு விடயமுண்டு. அது 30 ஆண்டு காலத்திற்கு மேலாக நம் நாட்டுத் தாய்மார் மனதில் இருந்த பாதிப்புகளை நீக்கியதுதான். கடந்த கால யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்களே.
நம் நாட்டுத் தாய்மார் யுத்தத்தினால் பட்ட துயரங்களை இந்த பூமியில் வேறு எவரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கு, தெற்கு என்றில்லாமல் நாட்டின் சகல தாய்மாரும் துயரங்களை அனுபவித்தனர். பாடசாலைகளுக்கு முன்பாக தம் பிள்ளைகள் வெளியில் வரும்வரை காவல் நின்ற யுகத்துக்கு நாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தாய்மாரே ஜனாதிபதிக்கு பெருமளவில் வாக்களிப்பார்கள் என்று உறுதியாகக் கூறிய பிள்ளைகளைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் பாடசாலை வாசலில் காவல் நின்றவர்கள் தமது தாய்மாரே என்பதை பிள்ளைகள் உணர்ந்துள்ளனர்.
இந்நாட்டின் பெண்களுக்காக நாம் என்ன செய்துள்ளோம் என எவரும் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களின் மனதில் நிம்மதியை உருவாக்கியமையே என எம்மால் கூறமுடியும்.
இந்நாட்டில் 53 வீதம் பெண்களே உள்ளனர். யுத்தத்தை இல்லாதொழித்தமை, போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தமை கசிப்பு போன்ற மதுபாவனைக்குத் தடைவிதித்தமை போன்றவை பெண்களுக்கு நிம்மதியைப் பெற்றுக் கொடுத்துள்ள விடயங்கள். இன்று பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது எனவும் தடைகள் போடப்பட்டுள்ளன.
இத்தகைய கட்டுப்பாடுகளினால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் சமூக நலனைக் கருத்திற்கொண்டே அரசாங்கம் செயற்படுகின்றது. மதுபாவனை போன்றவற்றால் ஏற்படும் மோசமான பிரதிபலனைக் குறைக்கவும் சமூக மேம்பாட்டை வலுப்படுத்தவும் இது உதவியுள்ளது.
இந்நாட்டைப் பொறுத்தவரை பொருளாதாரத்திற்கு பெண்களே பாரிய பங்களிப்புச் செய்கின்றனர். தேயிலை, ஆடைத் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளென பல துறைகளை இவற்றில் குறிப்பிட முடியும். சில துறைகளில் ஆண்களை விட பெண்களே பெருமளவில் பணிபுரிவதைக் காணமுடிகிறது.
பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்குவதை விட பெண்களுக்கான மதிப்பையும் கெளரவத்தையும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஆணைக் குழுவொன்றை மகளிர் அமைச்சின் கீழ் ஏற்படுத்துவதுடன் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலுள்ள பெண்கள் அமைப்புகள் பங்கேற்ற கலாசார, நடன நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டதுடன் 2010 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தேசிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக